சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியில் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சாமி தரிசனம் செய்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் இன்று உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க, இன்று மதியம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வந்தடைந்தார். அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில், உதயநிதி ஸ்டாலின் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருக்கோயில் சார்பாக அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமிதோப்பு பதியின் பள்ளி அறைக்கு சென்ற உதயநிதி, அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தார்.
தரிசனம் செய்த பின்னர், பொதுமக்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், மக்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து உலக மீனவர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.







