சொந்த கட்சியிலேயே எழுந்துள்ள எதிர்ப்பால் தமது தலைமையிலான கூட்டணி அரசு ஆட்டம் கண்டுள்ள நிலையில், வாரிசு அரசியல் புகாருக்கு காட்டமாக பதிலடிகொடுத்துள்ளார் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்ரே.
சிவசேனா எம்.எல்.ஏக்கள் 55 பேரில் 38 பேர் அதிருப்தியாளர்களாக மாறி மகா விகாஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அவர்கள் அணி வகுத்து நின்கின்றனர். சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 10 பேர் உள்பட 48 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அவருக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. தமது தலைமையில் உள்ளதுதான் உண்மையான சிவசேனா என சூளுரைத்து வருகிறார் ஏக்நாத் ஷிண்டே. சிவசேனா எம்.எல்.ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் அதிருப்தியாளர்கள் அணியில் உள்ளதால் அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படியான நெருக்கடியான சூழலில், மகாராஷ்டிர முதலமைச்சரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்ரே இன்று கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது முதலமைச்சர் பதவி தன்னைவிட்டு போனாலும், போராடும் குணம் எப்போதும் தம்மைவிட்டு போகாது எனத் தெரிவித்தார். உயிருள்ளவரை கட்சியைவிட்டு விலக மாட்டேன் எனக் கூறியவர்கள், இப்போது விலகிச் செல்வதாக வேதனை தெரிவித்த உத்தவ் தாக்ரே, சிவசேனா கட்சியை புத்தம் புதிதாக தொடங்க வேண்டும் என்றார்.
தம் மீதான வாரிசு அரசியல் புகாருக்கும் பதிலடி கொடுத்த உத்தவ் தாக்ரே, தமது மகனை எம்.பியாக்கிய ஏக்நாத் ஷிண்டேவிற்கு ஆதித்யா தாக்ரேவின் வளர்ச்சியைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதிருப்தியாளர்கள் சிவசேனா என்கிற மரத்திலிருந்து பூக்கள், பழங்கள், கிளைகள் போன்றவற்றை எடுத்துச் செல்லாம் ஆனால் அதன் வேரை ஒருபோதும் எடுத்துச் செல்ல முடியாது என சிவசேனாவின் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் உருக்கமாக உத்தவ் தாக்ரே தெரிவித்தார்.