சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பதற்கு தாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரி
அரங்கத்தில், மெய் நிகர் தொழில்நுட்ப ஆய்வக தொடக்க நிகழ்ச்சி
நடைபெற்றது. சென்னை லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பள்ளி உட்பட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஐந்து பள்ளிகளில் இந்த திட்டம் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மெய்நிகர் ஆய்வகம் அமைக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், செல்வத்திலேயே உயர்ந்த செல்வமான கல்விச் செல்வத்தை மாணவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்களுக்கு சொல்லிக் கொடுத்திருப்பதாகக் கூறினார். அதனாலேயே கல்விப் பணிகளில் தாம் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். மெய் நிகர் ஆய்வகத்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு அனைத்துதுறைகளிலும் முன்னேற கல்வி மிகவும் முக்கியமானது எனக் கூறிய உதயநிதி ஸ்டாலின், அதனால் கல்விச் செல்வத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க திமுக அரசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அரும்பாடு பட்டுக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஒரு கல்வி அமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செயல்பட்டுக்கொண்டிருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி கொடுத்துவைத்த தொகுதி என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசியதை சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின், அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆனதற்கு தாம்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார். அந்த அளவிற்கு தம் மீது தொகுதி மக்கள் அன்பும் பாசமும் வைத்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் உதயநிதி ஸ்டாலின் கூறிஃனார்.







