சென்னையில் இன்று அரசு பேருந்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பயணித்தார்.
சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகளுக்கு அடுத்தடுத்த நிறுத்தங்களின் பெயரை ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த புதிய திட்டத்தின்படி பேருந்து நிறுத்தங்களை அடைவதற்கு முன்பாக 300 மீட்டர் தூரத்தில், அவற்றின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பு செய்யப்படும். அதன் பயன்பாட்டை தொடங்கி வைத்த பிறகு, பேருந்தில் உதயநிதி ஸ்டாலின் பயணம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதற்கட்டமாக 150 பேருந்துகளில் இப்புதிய வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கூறினார். விரைவில் தமிழகம் முழுவதும் அனைத்துப் பேருந்துகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தாங்கள் அமைச்சராவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், அதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.







