சென்னையில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 2000 படுக்கைகள் உருவாக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது ’ நந்தம்பாக்கம் கொரோனா சிகிச்சை மையம் விரிவான இடமாக இருப்பதால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க 1000 படுக்கை வசதியை ஏற்படுத்த அடிப்படை பணிகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ளன. இதில் 860 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளாக இருக்கும். மீதமுள்ள படுக்கைகள் சாதாரண வசதிகளுடன் கூடியதாக இருக்கும்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்திலும் மணலியிலும் இருக்கும் சுகாதார மையத்தில் தலா 100 படுக்கைகள் இருக்கிறது. இந்த படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு கொடுக்கப்படும். இந்த பணிகள் பத்து நாட்களுக்குள் நிறைவடையும். மேலும் தண்டையார்பேட்டையில் உள்ள மருத்துவமனையிலும் படுக்கை வசதிகள் ஏற்படுத்த பணிகள் நடந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2000 படுக்கைகளை சில தினங்களுக்குள் உருவாக்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி நாளையே தொடங்க வாய்ப்பில்லை’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.







