தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் என இரண்டையும் ஒரே தராசில் இருக்கும் இரு தட்டுகளை போன்று எண்ணி தமிழ்நாடு அரசு செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 3-வது நாளாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுலர்களுடனான மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலின், நாமக்கல் கவிஞர் மாளிகை முன்பாக மகிழம் மரக்கன்றை நட்டார்.
தொடர்ந்து மாநாட்டில் பேசிய அவர், தேசத்திற்கு நிலையான வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ?, அதனை போன்று சுற்றுச்சூழல் துறைக்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார். புவி வெப்பமயமாதலை தடுக்க வனப் பரப்பை அதிகப்படுத்துவது, பசுமை சூழலை உருவாக்குவது வருங்கால தலைமுறைக்கும் அத்தியாவசியமாகிறது எனக்கூறினார்.
அண்மைச் செய்தி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நன்றி
எதிர்க்கட்சியாக இருந்த போதும் சுற்றுச் சூழலை மனதில் வைத்துக்கொண்டு மரக்கன்றுகளை நடும் பணிகளை மேற்கொண்டதை சுட்டிக்காட்டிய அவர், திமுக அரசு பொறுப்பேற்றவுடன் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் என துறைக்கு பெயர் சூட்டியதாகவும் தெரிவித்தார். பிளாஸ்டிக்கை ஒழிக்க மஞ்சள் பை இயக்கத்தை தொடங்கியதாக கூறிய முதலமைச்சர், தற்போது முதல்முறையாக மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் வனஅலுவலர் மாநாட்டையும் நடத்தி வருவதாக தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








