அமெரிக்காவில் இருந்து 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தல்!

119 சட்டவிரோத குடியேறிகளுடன் இரண்டு அமெரிக்க விமானங்கள் பிப்ரவரி 15-16 தேதிகளில், அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தில் தரையிரங்கவுள்ளன.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் தங்கியிருந்த இந்தியர்கள் 104 பேரை முதற்கட்டமாக C-17 என்ற ராணுவ விமானத்தில் அனுப்பி வைத்தது.

டெக்சாஸின் சான் அன்டோனியோவிலிருந்து புறப்பட்ட C-17 அமெரிக்க ராணுவ விமானம், கடந்த பிப்.05 ஆம் தேதி பிற்பகல் 1.59 மணியளவில் பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்த நிலையில் மீண்டும் அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய 100க்கும் மேற்பட்ட இந்தியர்களை இரண்டு விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு அமெரிக்கா அனுப்பி வைக்கிறது. முதல் விமானத்தில் 119 பேர் நாளை இரவு 10.05 மணிக்கு அமிர்தசரஸில் தரையிரங்குவர்.  இரண்டாவது விமானம் பிப்ரவரி 16 ஆம் தேதி இரவு தரையிறங்கும்.

முதல் விமானத்தில் பஞ்சாபை சேர்ந்த 67 பேர், ஹரியானாவை சேர்ந்த 33 பேர் மற்றும் குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த 19 பேர் தரையிரங்குவர்.

பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். அமெரிக்கா – இந்தியா இடையேயான பல வர்த்தகங்கள் குறித்து அதிபர் ட்ரம்ப் உடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, அமெரிக்காவில் சட்ட விரோதமாக வசிக்கும் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது குறித்தும் பேசினார்.

இருதரப்பு சந்திப்பிற்குப் பிறகு பிரதமர் மோடியும், டிரம்பும் நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில், இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மோடி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருக்கும் இந்திய குடிமக்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்களை இந்தியா திரும்ப அழைத்துச் செல்லத் தயாராக உள்ளது என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.