சமீபக் காலமாக இந்தியாவில் ட்விட்டர் பல சிக்கல்களை எதிர்கொண்டு வரக்கூடிய நிலையில், தனக்கான புதிய பாரிணாமத்தை அந்நிறுவனம் தேடிக்கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஷேர் சாட் நிறுவனத்தை வாங்க உள்ளதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.
ஷேர் சாட் நிறுவனத்தின் மோஜ் செயலியை குறிவைத்து இந்த பேரம் நடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருக்கக்கூடிய நிலையில், தற்போது மோஜ் செயலியை மக்கள் பெரிதும் விரும்பியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதாவது இந்தியாவில் 160 மில்லியனுக்கும் அதிகமானோர் ஷேர் சாட் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், மோஜ் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 80 மில்லியனை கடந்துள்ளது. இது கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும். குறைந்த காலத்தில் இவ்வளவு பயனாளர்களை கொண்டுள்ளது என்பது சாதாரண விடயமல்ல.
எனவே இதனை பயன்படுத்தி டிக்டாக் செயலிக்கு மாற்றாக மோஜ் செயலியை இந்தியாவில் களமிறக்க ட்விட்டர் நிறுவனம் ஆலோசித்து வருகிறது. இந்த பேரத்தில் ஏற்கெனவே 1.1 பில்லியன் டாலர்களை ட்விட்டர் வழங்கியுள்ளதாகவும், மேலும் 900 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன.
எப்படியாயினும் இந்த பேரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரு நிறுவனங்களிடமிருந்தும் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.