கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவரது வீட்டிற்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதனிடையே, இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலரிடம் புகார் அளித்ததையடுத்து, அவரது வீட்டிற்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்தச் சம்பவத்துக்கு திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியருக்குக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷைக் கைது செய்ய வேண்டும் என்றும், தவெக தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு எதிர்க்கட்சிகளும் தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் மனு அளித்து, எம்.எல்.ஏ. அருள் விக்னேஷைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தின.
இது குறித்து விளக்கமளித்த எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், தான் அவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். மேலும், புதிய பேருந்து நிலையம் கட்டுவதில் நடைபெற்றுள்ள ஊழல்களை நான் வெளிக்கொண்டு வந்ததால், எதிர்க்கட்சிகள் எனக்கு எதிராக அவதூறு பரப்புகின்றன என்றும், நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்கப் பரிசோதனைக்குத் தயார் என்றும் விளக்கமளித்தார்.
இந்த விவகாரம் அரசு தரப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டினார். அதில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷைக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் உயர் அதிகாரிகளிடம் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை ஏழு நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு தமிழக காவல்துறை இயக்குநருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசமான வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பியதாக ‘தி நியூஸ் மினிட்’ என்ற ஊடகத்தில் நவம்பர் 11, 2026 அன்று வெளியான செய்தியின் அடிப்படையில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் தவறான நடத்தையில் ஈடுபட்டதாகவும், குறிப்பாக, மதுபோதையில் மாவட்ட ஆட்சியரின் இல்லத்திற்குச் சென்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி விஜயா ரஹாத்கர், தமிழக காவல்துறை டிஜிபிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உயர் அதிகாரிகளிடம் அளித்ததாகக் கூறப்படும் புகார்கள் மீதும், சட்டமன்ற உறுப்பினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்தும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து ஆய்வு செய்யுமாறும், சம்பந்தப்பட்ட நபர் வகிக்கும் பதவியைக் கருத்தில் கொள்ளாமல், எவ்வித அரசியல் அழுத்தமும் தலையீடும் இன்றி இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை ஏழு நாட்களுக்குள் மகளிர் ஆணையத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
பொதுப் பணியில் உள்ள பெண்களின் நலன், கண்ணியம் மற்றும் பாதுகாப்பை எந்தவித சமரசமும் இன்றி உறுதி செய்ய வேண்டும்.
தவறான நடத்தையில் ஈடுபடும் ஒருவர் எந்தப் பதவியில் இருந்தாலும், அதிகாரத்தில் இருந்தாலும், பொறுப்புக்கூறலில் இருந்து விடுபட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.”
–




