அறக்கட்டளை பணமோசடி விவகாரம்; சினேகன், ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு

சினேகம் அறக்கட்டளை பண மோசடி விவகாரத்தில், பாடலாசிரியர் சினேகன் மற்றும் பாஜக நிர்வாகி ஜெயலட்சுமி ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சினேகம் அறக்கட்டளை யாருக்குச் சொந்தமானது என பாஜக நிர்வாகியும், நடிகையுமான…

சினேகம் அறக்கட்டளை பண மோசடி விவகாரத்தில், பாடலாசிரியர் சினேகன் மற்றும் பாஜக நிர்வாகி ஜெயலட்சுமி ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

சினேகம் அறக்கட்டளை யாருக்குச் சொந்தமானது என பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி மற்றும் திரைப்பட பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் மாறி மாறி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

ஆனால் சினேகம் அறக்கட்டளை பெயரில் நடிகை ஜெயலட்சுமி பணமோசடியில் ஈடுபட்டதாக பாடலாடசிரியர் சினேகன் தெரிவித்ததை கண்டிக்கும் விதமாக, சினேகன் மீது மீண்டும் ஜெயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து சினேகன் மீது அவதூறு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் சென்னை காவல்துறையினருக்கு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாடலாசிரியர்
சினேகன் மீது அவதூறு பரப்புதல் உட்பட 2 பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீசார்
வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் சினேகம் அறக்கட்டளை பண மோசடி புகார் தொடர்பாக நடிகை ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பாடலாசிரியர் சினேகன் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் பாஜக நிர்வாகி மற்றும் நடிகையான ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.