மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. அதன்படி. 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.32 சதவீதம் பேரும், மாணவர்கள் 90.96 சதவீதம் பேரும் தேர்வாகி உள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.36 சதவிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபேல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 94.38 சதவீதம் பேரும், மாணவர்கள் 85.83 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 31 ஆயிரத்து 034 பேர் எழுதவில்லை. 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 42,519 பேர் எழுதவில்லை.
இந்நிலையில், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறு தேர்வு அடுத்த மாதம் 25ந் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக்ஸ்ட் மாதம் 2-ம் தேதி முதல் மறு தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனிடையே, 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 11-ம் வகுப்பில் சேருவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 11-ம் வகுப்பு சேரவரும் மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பாடப்பிரிவுகளை ஒதுக்கிட வேண்டும். அதை தவிர பரிந்துரை அடிப்படையில் பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்ய கூடாது என எச்சரித்துள்ளது.
பட்டியலின மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவாக இருப்பினும், இட ஒதுக்கீட்டை பின்பற்றி பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை எந்தவித புகாருக்கும் இடம் தராமல், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்