ஈரோட்டில் லாட்டரி வாங்கி ரூ. 62 லட்சம் பணத்தை இழந்த நூல் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு, எல்லப்பாளையம் முல்லை நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (56). இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மகள் நித்யா ஆனந்தி திருமணமாகி குமாரபாளையத்தில் கணவருடன் வசித்து வருகிறார். கணவரை இழந்த மற்றொரு மகள் திவ்யபாரதி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
தொடக்க காலத்தில் ராதாகிருஷ்ணன் தறிப்பட்டறை நடத்தி வந்துள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் பின்னர் நூல் கமிஷன் ஏஜெண்டாக வேலை செய்து வந்துள்ளார். ராதாகிருஷ்ணனுக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த 39வது வார்டு திமுக கவுன்சிலர் கீதாஞ்சலி என்பவரின் கணவர் செந்தில்குமாரிடம் லாட்டரி வாங்கி வந்துள்ளார். இந்நிலையில், உருக்கமான வீடியோ ஒன்றை செல்போனில் பதிவிட்டு வெள்ளிக்கிழமை மாலை நண்பர்களுக்கு அனுப்பிய ராதாகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த வீடியோவில் செந்தில்குமாரிடம் லாட்டரி வாங்கி ரூ. 62 லட்சத்தை இழந்ததாகவும், உயிருடன் இருந்தால் இன்னும் பணத்தை இழந்துவிடுவேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், பல குடும்பங்கள் லாட்டரியால் பாதிக்கப்பட்டு வருவதால் ஈரோட்டில் லாட்டரி விற்பனையைத் தடுக்கவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ராதாகிருஷ்ணனின் மனைவி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லாட்டரியால் பணத்தை இழந்து ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement: