தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தேனி, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகன மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ஊட்டியில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து குன்னூர் அருகே மண் சரிவில் சிக்கியது. இதில் பேருந்து ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் நடத்துனர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கும் கனமழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று நாட்களுக்கு போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மலைப்பாதையில் பயணிக்க கூடிய பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இரவு நேர பயணங்களை தவிர்க்குமாறும், சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களும் மூடப்பட்டுள்ளது.




