பண மோசடி வழக்கு தொடர்பாக சிவ சேனா மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
பத்ரா சால் நில மோசடி தொடர்பாகவும், அதில் பண மோசடி நடந்திருப்பது தொடர்பாகவும் மும்பையில் உள்ள சஞ்சய் ராவத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை இருமுறை சம்மன் அனுப்பியது. எனும், விசாரணைக்கு ஆஜராகாத சஞ்சய் ராவத், நாடாளுமன்றப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் ஆகஸ்ட் 7ம் தேதி வரை கால அவகாசம் கோரி இருந்தார்.
இதை ஏற்க மறுத்த மும்பையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குனரகம், இன்று சஞ்சய் ராவத்தை அவரது இல்லத்தில் இருந்து கைது செய்தது.
சஞ்சய் ராவத்திடம் விசாரணை நடத்தும் நோக்கில் அவர் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், பொய்யான குற்றச்சாட்டு மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது சிவ சேனா மற்றும் மகாராஷ்டிராவை பலவீனப்படுத்தும் முயற்சி என்றும் குறிப்பிட்டார்.
இதுபோன்ற அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் தான் அடிபணிய மாட்டேன் என தெரிவித்த சஞ்சய் ராவத், சிவ சேனாவை விட்டு வெளியேற மாட்டேன் என்றும் கூறினார்.
சஞ்சய் ராவத் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான சிவ சேனா தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
சஞ்சய் ராவத் கைது செய்யப்படுவதை முன்னிட்டு, மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநில காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது.









