சென்னையில் நாளை காலை மட்டும் உணவகங்கள் செயல்படாது என்று சென்னை உணவகங்கள் சங்கச் செயலாளர் ஆர்.ராஜ்குமார் அறிவித்துள்ளார்.
மே 5ஆம் தேதி வணிகர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திருச்சியில் வணிகர்கள் மாநாடு நடைபெறவுள்ளதால், விக்கிரமராஜாவின் கோரிக்கையை ஏற்று ஹோட்டல் சங்கத்தினர் உணவகங்களுக்கு நாளை காலை விடுமுறை விட முடிவு செய்துள்ளனர்.
மதியம் முதல் உணவகங்கள் அனைத்தும் வழக்கம்போல் செயல்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் விருந்தினராகப் பங்கேற்கும் இந்த மாநாட்டில், எரிபொருள் விலை, காய்கறி உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் உணவுகள் விலை அதிகரித்துள்ளது குறித்து விவாதிக்கவுள்ளனர்.
வணிக எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் இந்த மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.








