தமிழ்நாட்டில் 300 நியாய விலைக் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை தொடங்கும் நிலையில், வெளிச்சந்தையில் நேற்று ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் 82 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நியாயவிலைக்கடைகளில் தக்காளி விற்பனையை விரிவுபடுத்துவது , காய்கறி அங்காடி மூலம் நகர பகுதிகளில் காய்கறி விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேலும் 300 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை நேற்று அறிவித்தது.
அதன்படி தமிழ்நாட்டில் மேலும் 300 ரேசன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சின்ன வெங்காயம் ரூ. 160 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சி 250- 260 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.





