தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,944 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவி வருவதால் மத்திய அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதேபோல், தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே சென்ற நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
மேலும் மாவட்டம் வாரியாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி தொற்று பரவலை கட்டுப்படுத்து வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் முக்கவசம் அணிய வேண்டும், சமூக பாதுகாப்பினை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் 1,944 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,32,343 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதித்து கடந்த 24 மணி நேரத்தில் 2,379 பேர் குணமடைந்துள்ளதால், 34,78,902 பேர் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனாவால் இன்று உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொற்று பாதித்து இதுவரை 38 ஆயிரத்து 32 பேர் உயிரிழந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
– இரா.நம்பிராஜன்








