சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!

சட்டப்பேரவை வரலாற்றிலேயே விடுமுறை எடுக்காமல் அனைத்து நாட்களும் வருகை புரிந்த முதலமைச்சர் பழனிசாமி தான் என்று சட்டப்பேரவை தலைவர் தனபால் புகழாரம் சூட்டினார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வந்த சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட்…

சட்டப்பேரவை வரலாற்றிலேயே விடுமுறை எடுக்காமல் அனைத்து நாட்களும் வருகை புரிந்த முதலமைச்சர் பழனிசாமி தான் என்று சட்டப்பேரவை தலைவர் தனபால் புகழாரம் சூட்டினார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வந்த சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி நாளான இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, இந்த ஆட்சி மூன்று மாதம் தான் இருக்கும், ஆறு மாதம்தான் இருக்கும் என எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்பி வந்த நிலையில், வெற்றிகரமாக ஐந்தாண்டுகளை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

50 ஆண்டுகாலம் தீர்க்கப்படாமல் இருந்த காவிரி நதிநீர் பிரச்னையை, சட்டப் பூர்வமாக தீர்ப்பப் பெற்று தீர்த்து வைத்தது ஜெயலலிதாவின் அரசுதான் என்றும், எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்து ஜெயலலிதாவின் கனவை நனவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய சட்டப்பேரவை தலைவர் தனபால், 15ஆவது சட்டப்பேரவையில் அதிக கேள்வி எழுப்பிய எம்.எல்.ஏ.க்களில் கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபு முதலிடத்திலும், திமுக எம்எல்ஏ மஸ்தான் இரண்டாம் இடத்திலும் இருப்பதாக தெரிவித்தார்.

அதிகபட்சமாக அமைச்சர் தங்கமணி 102 வினாக்களுக்கு பதிலளித்து முதலிடத்திலும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 97 வினாக்களுக்கு பதிலளித்து இரண்டாம் இடத்திலும் இருப்பதாக தெரிவித்தார்.

மூன்றாவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 79 வினாக்களுக்கு பதிலளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சட்டப்பேரவை வரலாற்றிலேயே, விடுமுறை எடுக்காமல், அனைத்து நாட்களும் பேரவைக்கு வருகை புரிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் சட்டப்பேரவை தலைவர் தனபால் புகழாரம் சூட்டினார்.

கூட்டத் தொடர் நிறைவடைந்ததை அடுத்து சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.