தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளியைச் சார்ந்த 152 மாணவ, மாணவிகள் சிறப்பு விமானம் மூலம் சென்னையில் இருந்து பெங்களூரு செல்கின்றனர். அவர்களை சேப்பாக்கம்
திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழியனுப்பினார்.
44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி மகாபலிபுரத்தில் நாளை துவங்க உள்ள
நிலையில், மாணவர்களிடையே செஸ் விளையாட்டு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 152 மாணவர்களை தமிழ்நாடு அரசு சிறப்பு விமானம் மூலம் இலவசமாக அழைத்துச் செல்கிறது. மாணவ, மாணவியர்கள் செல்லக்கூடிய விமானத்தில் செஸ் விளையாடுவதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்திற்கு 4 மாணவ, மாணவிகள் என மொத்தமாக 38 மாவட்டத்தைச் சேர்ந்த 152 மாணவர்கள் இந்த விமானப் பயணத்தில் கலந்துகொள்கின்றனர். சென்னையில் இருந்து பெங்களூர் வரை சென்று மீண்டும் சென்னைக்கு மாலை 4:30 மணி அளவில் திரும்புகின்றனர்.
சென்னையில் இருந்து பெங்களூருக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் கட்டணமில்லாமல்
விமானப் பயணம் மேற்கொள்வதுடன், விமானத்தில் பறந்து கொண்டே சதுரங்கம்
விளையாடவுள்ள சிறப்பு விமான பயணத்தை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா. மோ.அன்பரசன், தொழில் துறை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்து விமானத்தில் செல்லக்கூடிய மாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்தனர்.
-ம.பவித்ரா








