தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில், பிறந்து 14 நாட்களே ஆன குழந்தையின் கட்டை விரலை, கவனக்குறைவால் செவிலியர் துண்டித்தாக புகார் எழுந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் – பிரியதர்ஷினி தம்பதி. இவர்களுக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் கடந்த 25-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. குறைமாத பிரசவம் என்பதால், குழந்தையின் வயிற்றில் பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தாய்ப்பாலுக்கு பதிலாக குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், குழந்தையின் ஊசியை அகற்றும் போது, செவிலியர் கவனக்குறைவாக கட்டை விரலை துண்டித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். எனினும் மருத்துவமனை நிர்வாகத்தினர் இதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர். இதுகுறித்து விளக்கமளித்த மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார், குழந்தையின் கட்டை விரலின் மேல் பகுதியில் உள்ள சதைப் பகுதி மட்டுமே வெட்டப்பட்டுள்ளதாகவும், அதனை இணைத்து தையல் போட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். துறைரீதியான விசாரணையின் முடிவில், தவறு நடந்தது கண்டறியப்பட்டால், செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.







