ஜூலை 4ந்தேதி சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்கிற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்கை தமிழ்நாடு அடைவதே திமுக அரசின் நோக்கம் என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 69,375 கோடி ரூபாய் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 131 புரிந்துணர் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
துபாய், அபுதாபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் பயணம் மேற்கொண்டபோதும், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் தமிழ்நாட்டில் சர்வதேச நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் உள்ளிட்டோரும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்த மே 30 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை ஜெர்மனியில் நடைபெற்ற ஹன்னோவர் மெஸ்ஸே (Hannover Messe -2022) என்ற தொழில் கண்காட்சியில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படும் வகையில், அடுத்தக்கட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டை ஜூலை 4 ஆம் தேதி சென்னையில் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.