உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.552 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியமாக, 15 வது நிதி ஆணையத்தின் பரிந்துரைபடி தமிழ்நாடு அரசு நிதி விடுவித்துள்ளது. இதன் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.1,104 கோடியில் முதல் தவணையான ரூ.552 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளுக்கு ரூ.441 கோடியும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.83 கோடியும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.28 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் தடையற்ற குடிநீர், மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.







