ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசரச் சட்டம் தொடர்பாக, அரசு அமைத்த குழு நாளை முதல் ஒரு வாரம் தொடர்ந்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளில் திறமை உள்ளதா? அல்லது வெறும் தந்திரங்கள் உள்ளதா? என்பதை ஆராயவும், உயிரிழப்புகள், நிதி இழப்பை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டின் தீய விளைவுகள் குறித்த தரவுகளைத் திரட்ட ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழு தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள அரசாணையில், ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களை ஆராய வேண்டும், ஆன்லைனனில் விளையாடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஆன்லைன் கட்டணங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும்.
மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்வதற்கான அம்சங்களைப் பற்றிய பரிந்துரைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவின் பதவிக்காலம் இரண்டு வாரங்களுக்கு இருக்கும் எனவும், குழுவின் செயல்பாட்டிற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு டிஜிபி உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு நாளை முதல் ஒரு வார காலத்திற்கு தீவிர ஆலோசனையில் ஈடுபட உள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் நிதியிழப்பு, உயிரிழப்பு உள்ளிட்ட ஆபத்தைக் கண்டறியும் தன்மை குறித்து ஆராய்ந்து இரண்டு வாரம் காலத்திற்குள்ளாக அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








