இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான தீமையை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதியன்று குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது.   ஐக்கிய நாடுகளின் அமைப்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பால் 2002…

குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான தீமையை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதியன்று குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

 

ஐக்கிய நாடுகளின் அமைப்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பால் 2002 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. குழந்தை தொழில்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்கு தகுந்த ஆதரவை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு இயல்பான குழந்தைப்பருவத்தை உறுதி செய்வதே இந்த நாளின் நோக்கமாக உள்ளது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாகக் அனுசரிக்கப்படுகிறது.

 

150 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் தங்கள் உடல், மன, சமூக அல்லது கல்வி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பகுதிகளில் பணிபுரிந்து வருவதால்,அதைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவது அவசியம். குழந்தைத் தொழிலில் ஈடுபடும் குழந்தைகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் குறைந்து வந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக சில இடங்களில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

 

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) 2017 ஆம் ஆண்டு அறிக்கை, இந்தியாவில் 15 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 20 சதவீதம் பேர் அபாயகரமான தொழில்கள் மற்றும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், 12 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் 17 வயதிற்கு முன்பே வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மதிப்பிட்டுள்ளது.

குழந்தைத் தொழில்களால் தனிநபர்களுக்கு ஏற்படும் தீங்குகள், குறிப்பாக போதைப்பொருள் கடத்தல், பாலியல் வர்த்தகம் மற்றும் ஆயுத மோதலில் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைப் பற்றி அதிக விழிப்புணர்வைப் பரப்ப இந்த இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் குழந்தைத் தொழில்களால் ஏற்படும் மன மற்றும் உடல்ரீதியான பாதிப்புகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க நிறுவப்பட வேண்டிய முறையான வழிகாட்டுதல்களை இந்த நாள் வலியுறுத்துகிறது.

 

2022 ஆம் ஆண்டுக்கான உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள் “குழந்தைத் தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலகளாவிய சமூகப் பாதுகாப்பு” என்பதாகும். குழந்தைத் தொழில்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான உறுதியான சமூகப் பாதுகாப்பை நிறுவுவதற்கான சமூகப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் திட்டங்களில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்பது இதன் பொருளாகும்.

 

– கோகுலப் பிரியா ( மாணவ ஊடகவியலாளர்)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.