தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல லட்ச ரூபாய் பறிமுதல்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 16…

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கும் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு வாகன சோதனையும், கண்காணிப்பும் தீவிரப்படுத்துப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவல்லிக்கேணி பாரதி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பாண்டியன் என்பவருக்கு சொந்தமான காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற இரண்டு லட்சம் ரூபாயினை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பறக்கும்படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது செய்யாறில் இருந்து விழுப்புரம் சென்ற வேனை சோதனை செய்ததில், அதில் வியாபாரி சுபாஷ் என்பவர் உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த 1 லட்சத்து 11 ஆயிரத்து 250 ரூபாயினை பறிமுதல் செய்தனர்.

நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா, இதுவரை நடந்த சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 20 லட்சத்து 73 ஆயிரத்து 800 ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இரண்டு இடங்களில் 3, லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தாராபுரம் அருகே தனியார் கல்லூரி வளாகத்திற்குள் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக அக்கல்லூரி முன்பாக திமுகவினர் 4 மணி நேரம் மேற்கொண்ட தொடர் போராட்டத்திற்கு பிறகே, தேர்தல் அதிகாரிகள் கல்லூரியில் பதுக்கி வைத்திருந்த பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட ஏம்பல் பகுதியில் உரிய அனுமதியின்றி வியாபாரி ஒருவர் எடுத்து சென்ற 75 ஆயிரத்து 380 ரூபாய் பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அத்தொகையை அறந்தாங்கி உதவி ஆட்சியர் ஆனந்த் மோகனிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தொகைக்கு, வியாபாரிகள் உரிய ஆவணங்களை காட்டினால் மீண்டும் ஒப்படைக்கப்படும் எனவும் உதவி ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், அவ்வழியே தளவாய்புரத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த 4 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் அத்தொகையை, வட்டாச்சியர் ஸ்ரீதர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி கல்யாணகுமாரிடம் ஒப்படைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.