ஆந்திர மாநிலம் திருப்பதி மலைக்கோயிலுக்கு செல்லும் பாதைகளில் இரவு நேரங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தேவஸ்தானம் எச்சரித்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் திருக்கோயில் அமைந்துள்ளது. நாள்தோறும் இங்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சில பக்தர்கள் வேண்டுதலின் காரணமாக மலை மீது நடந்தே சென்று சுவாமியை தரிசிப்பது வழக்கமாகும்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலைப்பாதையில் நடந்த சென்ற சிறார் ஒருவரை சிறுத்தை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருப்பதி வனப்பகுதியில் காவல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மலைப்பகுதியில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பாக கைத்தடிகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமிராவில் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று நடைபாதை அருகே உலாவிக்கொண்டிருந்த கரடியை வனத்துறையினர் விரட்டியடித்தனர். எனவே பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேந்தன்







