நாட்டிலேயே மிகவும் அதிக வயதுடைய ஆசிய வளர்ப்பு யானை பிஜுலி பிரசாத், 89-வது வயதில் அசாம் மாநிலத்தில் உயிரிழந்தது.
சோனித்பூர் மாவட்டத்தில் தி வில்லியம்சன் மாகோர் குழுமத்துக்குச் சொந்தமான பெஹாலி தேயிலைத் தோட்டத்தில் காலை 3.30 மணியளவில் அந்த யானை உயிரிழந்ததாக தேயிலைத் தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். தோட்டப் பணியாளர்கள், உள்ளூர் மக்கள், விலங்கு ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அந்த யானைக்கு அஞ்சலி செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உயிரிழந்த யானை குறித்து தேயிலைத் தோட்ட அதிகாரிகள் கூறியதாவது, ‘‘யானை பிஜுலி பிரசாத், தி வில்லியம் மாகோர் குழுமத்தின் அடையாளமாக இருந்தது. முதலில் பார்கங் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்கு குட்டி யானையாக அது கொண்டு வரப்பட்டது. அந்தத் தேயிலைத் தோட்டம் விற்கப்பட்டதையடுத்து, இந்த தோட்டத்துக்கு அந்த யானை மாற்றப்பட்டது. 89 வயது மதிக்கத்தக்க அந்த யானை, தோட்டப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அதற்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் இந்த தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்தது’’ இவ்வாறு கூறினர்.
‘பத்ம ஸ்ரீ’ விருதாளரும், பிரபல யானை மருத்துவருமான கெளஷல் கோன்வார் சர்மா கூறியதாவது:
“இந்தியாவில் உள்ள ஆசிய வளர்ப்பு யானைகளில் பிஜுலி பிரசாத் மிகவும் வயதானது. வனப்பகுதியில் உள்ள ஆசிய யானைகள் சுமார் 62-65 வயது வரை வாழும். முறையான கவனிப்புடன் வளர்க்கப்படும் இது போன்ற வளர்ப்பு யானைகள் 80 வயது வரை உயிர் வாழும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, யானை பிஜுலி பிரசாதின் பற்கள் அனைத்தும் விழுந்ததால், எந்த உணவையும் உண்ண முடியாமல் உயிரிழக்கும் தருவாயில் இருந்தது.
இது குறித்து தகவல் தெரிந்ததும், அங்கு சென்று அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் வழக்கமான உணவு முறை மாற்றப்பட்டு, நன்கு வேக வைத்த அரிசி மற்றும் சோயாபீன் உள்ளிட்ட அதிக புரதச் சத்து மிகுந்த உணவுகள் வழங்கப்பட்டன. இதன் காரணமாக, அந்த யானை நீண்டகாலம் உயிர் வாழ்ந்தது” இவ்வாறு தெரிவித்தார்.