ரயில்களின் தட்கல் முன்பதிவுகளில் முறைகேடுகளை குறைக்கும் வகையில், இந்திய ரயில்வே துறை, அதன் அதிகாரப்பூர்வ ஐஆர்சிடிசி செயலில், கணக்குகள் வைத்திருப்போர் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியிருந்தது. வருகிற ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகளை உடையவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யமுடியும்.
இந்த நிலையில் ஆதார் இணைப்பை தொடர்ந்து, இந்திய ரயில்வே பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி குளிர் சாதன வசதி அல்லாத ரயில்கள், விரைவு ரயில்களில் பயணிகளின் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரிக்கவுள்ளது. அதே போல் குளிர் சாதன வசதி கொண்ட ரயில்களில் இரண்டு கிலோ மீட்டருக்கு இரண்டு பைசா அதிகரிக்கவுள்ளது.
500 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லும் ரயில்களில் கட்டண உயர்வு இல்லை என்றும் அதற்கு மேல் செல்லும் ரயில்களில் பயணிகளின் கட்டணம் அரை பைசா அதிகரிவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளில் கட்டண உயர்வு இருக்காது என்றும் கூறப்படுகிறது. இந்த சிறிய அளவிலான கட்டண உயர்வு வருகிற ஜூலை 1 ஆம் தேதியில் அமலுக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.








