29.5 C
Chennai
April 27, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள் சினிமா

’துணிவு’ நாயகன் அஜித் பிறந்தநாள் இன்று…. – சில சுவாரஸ்ய தகவல்கள்!!

நடிகர் அஜித்குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை தற்போது காணலாம்….

➤ தமிழ் திரையுலக ரசிகர்களால் கொண்டாடப்படும் உச்சபட்ச நடிகராக இருக்கும் அஜித் குமாருக்கு அனூப் குமார் என்ற அண்ணனும் அனில் குமார் என்ற தம்பியும் உள்ளனர். இவர்கள் இருவரும் தொழிற்துறையில் கவனம் செலுத்தி வந்தாலும் யாரும் ஆடம்பர வாழ்வில் ஈடுபடுத்திக் கொள்ளாமலே இருக்கின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

➤ ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடிய நடிகர் அஜித் குமார் தனது பள்ளிப்படிப்பை முழுமையாக நிறைவு செய்யவில்லை. 10ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி பயின்ற பிறகு தனக்கு படிப்பு வரவில்லை என்ற காரணத்தால் நிறுத்திக்கொண்டார். ஆனாலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவராக தன்னை மெருகேற்றிக்கொண்டார்.

➤ படிப்பைப் பாதியிலே கைவிட்ட நடிகர் அஜித்குமார், தனது குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி இருசக்கர வாகன மெக்கானிக்காகப் பணியில் சேர்ந்தார். பைக், கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டிய அவர், தானாகவே அவற்றை ஓட்ட கற்றுக்கொண்டு, அதற்கான உரிமத்தையும் பெற்றார். இருசக்கர வாகனத்தைப் பிரித்து மீண்டும் சேர்க்கும் அளவிற்கு அந்த துறையில் கைதேர்ந்தவராக அஜித் குமார் மாறினார்.

➤ தமிழ் ரசிகர்களின் ஆசை நாயகனாக வலம் வரும் அஜித், உண்மையில் சினிமாவிற்குள் திட்டமிட்டு நுழையவில்லை. சினிமாவுக்கு வந்தது ஒரு எதிர்பாராத விபத்துதான் என்று அவரே கூறியுள்ளார். ஆனால் சினிமாவுக்குள் அறிமுகமாக தனக்கு யாரும் உதவவில்லை என்றும், அதற்கான முயற்சிகளை நானே எடுத்துக்கொண்டேன் என்றும் அஜித்குமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையை அடைய பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும், அதன் பின்னரே வாய்ப்பு கிடைக்க தொடங்கியதாகவும் அஜித்குமார் குறிப்பிட்டிருக்கிறார்.

➤ பள்ளி காலங்களில் படிப்பைத் தாண்டி, கிரிக்கெட், கால்பந்து மற்றும் என்சிசி போன்றவற்றில் நடிகர் அஜித் குமார் மிகவும் ஆர்வமாக கலந்துகொண்டுள்ளார். வகுப்பறைக்குள் அமர்ந்திருந்த காலங்கள் அனைத்தும் போரடித்த காலங்கள், அது தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறிய அவர், தன்னை மற்ற வேலைகளில் ஈடுபடுத்திக்கொண்டார். பைக் ரேசராக பலராலும் அறியப்பட்டாலும் அஜித் ஒரு கால்பந்தாட்ட வீரர் என்பது பலரும் அறியாத ஒன்றாகவே உள்ளது.

➤ 1991ல் தனது 20வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமான நடிகர் அஜித் குமார், அப்படத்தின் இயக்குனர் திடீரென மரணமடைந்ததால், அதில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். முதல் பட வாய்ப்பே கைநழுவிப் போனது அவருக்கு மிகவும் சவாலானதாக மாறியது. ஆனாலும் அடுத்தடுத்த முயற்சிகளின் மூலம் சிறுசிறு மாடலிங் விளம்பரங்களில் நடித்து பின்னர் அஜித் குமார் திரைத்துறைக்குள் நுழைந்தார்.

➤ நடிகர் அஜித் குமார் திரைத்துறைக்குள் நுழைவதற்கு முன்பாக துணி ஏற்றுமதி நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்தார். திரைத்துறையில் கோலோச்சிய நடிகர் அஜித், அதற்கு முன்பாக பணிபுரிந்த துணி வியாபாரத்திலும் திறம்பட செயல்பட்டுள்ளார். படிப்பை முடிக்காமல் வேலை செய்துவந்த அவருக்கு வீட்டில் எதிர்ப்பு வந்தாலும் தொடர்ந்து வேலைகளிலேயே அஜித்குமார் ஆர்வம் காட்டினார்.

➤ நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் நுழைந்த போது அவருக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லாததால் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டதுடன், கேலி கிண்டல்களுக்கும் ஆளானார். அவரின் ஆரம்ப படங்களுக்கு நடிகர் விக்ரம் டப்பிங் கொடுத்தார். இதற்கு பிறகே தமிழை நன்றாக கற்றுக்கொண்டு உல்லாசம் படத்தில் தனது குரலில் டப்பிங் கொடுத்தார் நடிகர் அஜித்.

➤ பைக் ரேசில் விபத்தில் சிக்கி சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்ததால் இனி மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்த பின்னர், நடிகர் அஜித் நடிப்பில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். செருப்பு விளம்பரத்திற்காக கேமரா முன் தோன்றிய நடிகர் அஜித், அப்போதுதான் கேமரா மொழி மீது ஈர்க்கப்பட்டார். தொடர்ந்து சில விளம்பரங்களில் நடித்துவந்த அவர், பின்னரே வெள்ளித்திரையில் தடம் பதித்தார்.

➤ தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகரான நடிகர் அஜித் நடித்து வெளியான முதல் படம் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படமாகும். 1993ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு பிறகே நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் நுழைந்தார். பிரேம புஸ்தகம் திரைப்படம், தமிழில் காதல் புத்தகம் என்ற தலைப்பிலும் வெளியானது. இதனைத் தொடர்ந்தே அமராவதி என்ற தமிழ் திரைப்படத்தில் அஜித்குமார் நடித்தார்.

➤ அமராவதி திரைப்படத்தின் போது படப்பிடிப்பு தளத்தில் “திருடா திருடா” படக்குழு அங்கு திடீரென வரவே அங்கிருந்த படக்குழுவினர் அனைவரும் மணிரத்னத்திடம் ஆட்டோகிராப் வாங்க ஓடினர். அஜித் மற்றும் அவருடன் மற்றொரு நபர் மட்டும் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தார். ஏன் நீங்கள் ஆட்டோகிராப் வாங்க செல்லவில்லையா என்று கேட்டதற்கு, இல்லை நான் வரும்கால நட்சத்திர நடிகருடன் அமர்ந்திருக்கிறேன் என்று சுரேஷ் சந்திரா கூறினார். இன்று வரை அஜித்தின் மேனேஜராக அவரே நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

➤ 1993ம் ஆண்டு முதலே திரைத்துறையில் நாயகனாக அவதாரம் எடுத்த நடிகர் அஜித், 1995ம் ஆண்டு வெளியான ஆசை திரைப்படத்திற்கு பின்னரே பெருவாரியான மக்களிடத்தில் கவனம் ஈர்க்கத் தொடங்கினார். இந்த படத்தில் வரும் மீனம்மா பாடல் இன்று வரை பட்டிதொட்டி எங்கும் பிரபலமான பாடலாகவே, தலைமுறைகள் கடந்தும் கொண்டாட்டப்பட்டு வருகிறது. ஆசை படத்திற்கு முன்பு நடித்த படங்கள் அனைத்தும் பெரிதாக வெற்றி இல்லாத படங்களாகவே அஜித்துக்கு அமைந்தன.

➤ 1995ல் ஆசை திரைப்படத்திற்கு பிறகு காதல் கோட்டை படத்தில் நடித்த அஜித் மற்றும் தேவையானி ஜோடி ரசிகர்களை ஈர்த்தது. அதுவரை பல வகையாக காதலித்து வந்த இளைஞர்கள் காதல்கோட்டை படத்தில் வந்த, பார்க்காமலே வந்த காதலை கொண்டாடி தீர்த்தனர். இதனைத் தொடர்ந்து ரசிகர்களின் விருப்பமான திரைப்படமாக காதல் கோட்டை அமைந்தது. 1996ம் ஆண்டைத் தொடர்ந்து 1998ல் வெற்றிப்படமாக அமைந்த இந்த படம் அஜித்தின் திரைவாழ்க்கையில் ஒரு மைல்கல்லாகவே பார்க்கப்படுகிறது.

➤ 1994ம் ஆண்டு வெளியான பவித்ரா திரைப்படத்தில் நடித்த அஜித், படப்பிடிப்பின் போது முதுகுதண்டில் பாதிப்பு ஏற்பட்டதால் எழுந்து நடக்கக்கூட முடியாத நிலையில் இருந்தார். அதனால் அவர், அதே போன்ற கதாபாத்திரத்தில் படுத்துக்கொண்டே நடித்தார். நாற்காலியில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த அஜித், அர்ப்பணிப்புடன் நடித்து கொடுத்தார் என அப்படத்தில் பணியாற்றியவர்கள் கூறினர்.

➤ தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் ஹீரோக்களாக வலம் வரும் விஜய் மற்றும் அஜித் இணைந்து நடித்த முதல் மற்றும் கடைசி படமாக 1995ம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே திரைப்படம் அமைந்தது. இதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், இருவருக்குமான கதை அமைந்தால், சூழல் ஏற்பட்டால் கண்டிப்பாக இணைய வாய்ப்புள்ளதாக அஜித் தனது நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

➤ 1993ல் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அஜித் 2000ம் ஆண்டுவரை மொத்தமாக 28 படங்களில் நடித்துள்ளார். இந்த எண்ணிக்கையில் பெரும்பாலான படங்கள் தோல்வியையே சந்தித்தாலும் காதல்கோட்டை, ஆசை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம் உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றியை பெற்றன. இதனால் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

➤ சினிமா மட்டுமல்லாது பல துறைகளில் தன்னை முன்னிறுத்திக்கொண்ட நடிகர் அஜித், சமையல் கலையிலும் கைதேர்ந்தவராக உள்ளார். படப்பிடிப்பின் போது சக நடிகர்களுக்கு பிரியாணி சமைத்து தருவது நடிகர் அஜித்தின் வழக்கம். அனைத்து உணவுகளையும் சமைக்கத் தெரிந்திருந்தாலும், பிரியாணியை சுவையாக சமைப்பதில் அஜித் வல்லவர் என அவரை அறிந்தார்கள் தெரிவிக்கின்றனர்.

➤ தனது திரைப்பட வேலைகளில் படு பிசியான நடிகராக இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலுக்கும் தவறாது வந்து வரிசையில் நின்று வாக்கு செலுத்தும் ஜனநாயக கடமையை நடிகர் அஜித் தவறாமல் செய்து வருகிறார். நட்சத்திர நடிகராக இருந்தாலும் வரிசையில் நின்று வாக்களிக்கும் இவரது பழக்கம் பலராலும் பாராட்டப்படக்கூடியதாக உள்ளது.

➤ தமிழ் சினிமாவில் இதுவரை எந்த நடிகரும் செய்யாத அதிரடி நடவடிக்கையாக தனது அனைத்து ரசிகர் மன்றங்களையும் நடிகர் அஜித் கலைத்தார். 2011ம் ஆண்டின் ஏப்ரல் 29ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்ட நடிகர் அஜித், தான் என்றுமே எனது ரசிகர்களை என் சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. மக்களுக்கு நல்லது செய்ய மன்றங்கள் தேவையில்லை என்று தெரிவித்து அதிரடி காட்டினார். அவரின் இந்த நடவடிக்கை விமர்சனங்களை தாண்டி பெரும்பாலானவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

➤ சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 2001ம் ஆண்டு வெளியான தீனா திரைப்படத்தில் நடித்த அஜித்துக்கு அந்த படத்தில் தீனதயாளன் என்ற கதாப்பாத்திர பெயர் இருந்தாலும் பெரும்பாலான வசனங்களில் ’தல’ என்றே அழைக்கப்பட்டிருப்பார். இந்த படத்தை தொடர்ந்து ஆசை நாயகன், காதல் மன்னன் என்ற அஜித்தின் புனைப்பெயர்களை கடந்து ’தல’ என்று அழைக்கப்பட்டார். அதற்கு பிறகான காலங்களில் ஆக்ஷன் கிங் அஜித் குமார் என்று அழைக்கப்பட்டாலும் ’தல’ என்ற பட்டமே பிரபலமானது.

➤ எந்த பொது நிகழ்வு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை முற்றிலுமாக தவிர்த்துள்ள நடிகர் அஜித், துக்க நிகழ்வுகளில் தவறாமல் கலந்துகொள்ளும் நபராக இருக்கிறார். நகைச்சுவை நடிகை ஆச்சி மனோரமா, முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரது இறுதி அஞ்சலியில் அஜித்குமார் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

➤ ரசிகர்களை சந்திக்க மாட்டார், விழாக்களுக்கு வர மாட்டார், அதிகம் பேட்டிகள் தர மாட்டார் என பல்வேறு விமர்சனங்கள் அஜித் மீது முன்வைக்கப்படுகின்றன. மிகச் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில்லை, தனது உடல்நலனில் அக்கறை செலுத்துவதில்லை என்றும் அவர் விமர்சிக்கப்படுகிறார். ஆனால் இவை எதையும் கண்டுகொள்ளாத நபராகவே அஜித் தன்னை முன்னிருத்திக்கொள்கிறார்.

➤ வீரம் திரைப்படத்தில் நடித்த அஜித், படத்தில் தனக்கு தம்பியாக நடித்த மைனா பட நாயகன் வித்தார்த்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதற்கு பிறகான படப்பிடிப்பு நாட்களில் நடிகர் அஜித்தே வித்தார்த்துக்கு தன் கையால் உணவு சமைத்து கொடுத்துவந்தார். அஜித்துக்கு மிகவும் பிடித்தமான உணவாக பிரியாணி இருந்தாலும் அனைத்து விதமான உணவுகளையும் அவரே சமைத்து கொடுத்துள்ளார்.

➤ அஜித் நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியை தழுவியிருந்தாலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில படங்களே வெற்றிப்படங்களாக மாறியுள்ளது. ஆனாலும் ரசிகர்களின் ஆகச்சிறந்த ஆதரவைப் பெற்ற ரசிகராக தன்னை மாற்றிக்கொண்டது திரை ரசிகர்கள் மத்தியில் அவரை எப்போதும் ஆஸ்தான நாயகனாகவே வைத்திருக்கிறது. தொடர்ந்து பல தோல்வி படங்களை கொடுக்காமல் இடையிடையே சில வெற்றிப்படத்தை கொடுத்து தன்னுடைய இடத்தை அஜித் எப்போதும் தக்க வைத்துக்கொள்கிறார் என்ற பேச்சும் இருந்தவண்ணமே உள்ளது.

➤ உலகளவில் ரேஸராக பல போட்டிகளில் பங்குபெற்ற நடிகர் அஜித், தன்னை சாதனை நாயகனாக மாற்றிக்கொண்டார். இதனைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு மாநில அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் அஜித் பங்கு பெற்று புகழ் பெற்றுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading