40 அடி உயர மாமரத்தின் மீது மூன்று அடுக்கு கனவு வீடு

40 அடி உயர மாமரத்தின் மீது மூன்று அடுக்கு கொண்ட தனது கனவு வீட்டை கட்டியுள்ளார் தொழில் அதிபர் ஒருவர். படுக்கையில் இருந்தபடியே மாமரத்தில் இருக்கும் மாம்பழங்கள், கைகளால் எட்டி பறிக்க முடியும் என்றால்…

40 அடி உயர மாமரத்தின் மீது மூன்று அடுக்கு கொண்ட தனது கனவு வீட்டை கட்டியுள்ளார் தொழில் அதிபர் ஒருவர்.

படுக்கையில் இருந்தபடியே மாமரத்தில் இருக்கும் மாம்பழங்கள், கைகளால் எட்டி பறிக்க முடியும் என்றால் எப்படி இருக்கும்?, காலை கண் விழிக்கும்பொது பறவைகள் உங்கள் அறையை சுற்றி வந்தால் எப்படி இருக்கும்? இதெல்லாம் சினிமால மட்டும்தான் பார்க்க முடியும் என எண்ணலாம். ஆனால், ஒரு குடும்பத்தினரின் நிஜ வாழ்க்கையில் இது சாத்தியமாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், 40 அடி உயர மாமரத்தின் மேல் கட்டப்பட்டுள்ள இந்த மூன்று மாடி வீட்டில் இரண்டு படுக்கையறைகள், ஒரு சமையலறை, ஒரு நூலகம் மற்றும் ஒரு லிவ்விங் ரூம் உள்ளது. இந்த வீடு அமைந்திருக்கும் பகுதி, மாம்பழங்களுக்கு பெயர்போன இடம். இங்கு வசித்து வந்த மக்கள் மாம்பழங்களை விற்று பிழைப்பு நடத்தி வந்தனர். நாட்கள் செல்ல செல்ல மக்கள் தொகை அதிகரித்த காரணத்தினால், மக்கள் மாமரங்களை வெட்டத் தொடங்கினார்கள்.

இந்த சூழலில், 1999-ஆம் ஆண்டு தனது கனவு இல்லத்தை கட்டுவதற்கான சரியான இடத்தை தேடி அழைத்துள்ளார் தொழிலதிபர் குல் பிரதீப் சிங். அப்போதுதான் மரங்கள் நிறைந்த இந்த இடம் அவர் மனதை கவர்ந்துள்ளது. பார்த்தவுடன் அவர் நினைத்தது, வீடு கட்டும் பணியின்போது ஒரு மரம் கூட வெட்டப்படக்கூடாது என்பதே.

இவரின், இந்த முடிவை அனைவரும் சாத்தியமற்றது, நடக்காது என்று கூற, அதை சவாலாக எடுத்துக்கொண்டு மாமரம் இருந்த நிலத்தை நியாயமான விலை கொடுத்து வாங்கினார் குல் பிரதீப் சிங். கட்டிடக் கலைஞரின் உதவியுடன் வீட்டின் கட்டுமானம் ஒரு வருடத்தில் முடிக்கப்பட்டது. மரம் சுமார் 20 அடி உயரம் இருந்தபோதே, இரண்டு தளங்களுடன் வீடு கட்டப்பட்டது.

வீட்டின் முழு அமைப்பும் இரும்பு ஸ்டீலாலும், வீட்டின் சுவர்கள் மற்றும் தளங்கள் செல்லுலோஸ் ஷீட் மற்றும் ஃபைபராலும் கட்டப்பட்டன. மரத்தைச் சுற்றி நான்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை மின்னலின் போது மின் கடத்தியாகச் செயல்பட்டு, வீட்டை பாதுகாக்கின்றது. மரத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப வீட்டின் கட்டமைப்பில் தேவையான மாற்றங்களை செய்து வரும் குல் பிரதீப் சிங் குடும்பத்தினர், மரத்தில் வசிக்கும் பறவைகள் மற்றும் சிறிய விலங்குகளை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் போலவே பாவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.