பழனி அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கூட்டத்தைப் புறக்கணித்து பாதியிலேயே அதிகாரிகள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி அருகே ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது கோட்டத்துறை
ஊராட்சி. இந்த ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று கிராமசபைக்
கூட்டம் நடைபெற்றது. கிராமசபைக் கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள்
பங்கேற்று தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது, கோட்டுத்துறை ஊராட்சியில்
உள்ள புங்கன் ஓடை குளம் தூர் வாருவது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக குளத்தை தூர் வாருவதற்கு தீர்மானம்
நிறைவேற்றப்பட்டு நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி வரும் நிலையில் இதுவரை
எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், குளத்தை பொதுப் பணித் துறையினர்தான் தூர்வார வேண்டுமென ஊராட்சி அதிகாரிகளும், நூறு ஏக்கருக்கும் குறைவாக உள்ளதால் புங்கன் ஓடை குளம் ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம்தான் தூர்வார வேண்டும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவிப்பதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து பலமுறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என்றும் கேள்வி எழுப்பினர். பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தாஹிரா பானு மற்றும் மணிமுத்து ஆகிய இருவரது தலைமையிலான அதிகாரிகள் கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு பாதியிலேயே வெளியேறினர். அப்போது கூட்டம் நிறைவடையும் வரை அமர்ந்து, தங்களுக்கு முறையான பதில் அளித்துவிட்டு செல்லுமாறு பொதுமக்கள் வலியுறுத்தினர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்காத அதிகாரிகள் பாதியிலேயே சென்றதால் கிராம சபைக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கருப்புத் துணியால் தங்களது வாய் மற்றும் கண்களை மூடியும்
கருப்பு பேட் அணிந்தும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். பொதுமக்களை
மதிக்காமல் கிராம சபைக் கூட்டத்தை பாதியிலேயே புறக்கணித்துவிட்டுச் சென்ற
அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என அரசு
அறிவித்துள்ள நிலையில், கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு அதிகாரிகள்
பாதியில் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: