அரசின் நீட் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் பூஜ்ஜியத்திற்கும் குறைவான மதிப்பெண்!

சென்னையில் 5 இடங்களில் நடத்தப்பட்ட அரசின் Elite NEET Coaching Centre-இல் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர் பூஜ்ஜியத்துக்கும் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. MBBS, BDS  ஆகிய மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள்…

சென்னையில் 5 இடங்களில் நடத்தப்பட்ட அரசின் Elite NEET Coaching Centre-இல்
பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர் பூஜ்ஜியத்துக்கும் குறைவான மதிப்பெண்களை
பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MBBS, BDS  ஆகிய மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது.

நீட் தேர்வு முடிவுகளில் பல மாநிலங்கள் அதிகமான தேர்ச்சியைப் பெற்ற நிலையில்,
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கடுமையாக
சரிந்தது.

தேர்வு எழுதிய 17,000 அரசுப் பள்ளி மாணவர்களின் 80% பேர் தோல்வியடைந்திருப்பதே
தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்ததற்கு காரணம் என்று கூறப்பட்ட
நிலையில், அரசின் சிறப்பு நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற
மாணவர்களுக்கு நீட் தேர்வு பற்றிய அடிப்படை தகவல் கூட தெரியவில்லை என்ற
அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னையில் பள்ளிக் கல்வித் துறையின் சிறப்பு நீட் பயிற்சி வகுப்புகள் 5
இடங்களில் நடத்தப்பட்டன. நன்கு பயிலும் மாணவர்கள் என்று தேர்வு செய்யப்பட்ட Elite Students-க்கு அரசின் சிறப்பு நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி வழங்கப்பட்டது.

இதன் மூலம் 384 மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத பதிவு செய்திருந்த
நிலையில், 346 மாணவர்கள் நீட் தேர்வை எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இவர்களில் 81 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்குரிய தகுதி மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளதும், 265 மாணவர்கள் தோல்வி அடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

தோல்வியடைந்த 265 பேரில், 5 பேர் பூஜ்ஜியத்துக்கும் கீழான மதிப்பெண்களும் ( –
Marks ), 2 பேர் பூஜ்ஜியம் மதிப்பெண்களும் ( 0 Marks ), 6 பேர் ஒற்றை இலக்க
மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். அரசின் சிறப்பு நீட் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நீட் தேர்வில் கடைபிடிக்கப்படும் எதிர்மறை மதிப்பெண் ( Negative Marks ) பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லை என்பது, பூஜ்ஜியத்துக்கும் கீழாக
மதிப்பெண்கள் பெற்றுள்ளதன் மூலம் தெரியவந்துள்ளது.

இதனால் மாணவர்களுக்கு சிறப்பு நீட் பயிற்சி மையங்களில் உண்மையிலேயே பயிற்சி
வழங்கப்பட்டதா ? அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் அது யாரால் எந்த முறையில்
வழங்கப்பட்டது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தலைநகர் சென்னையில், அரசின் சிறப்பு நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற
மாணவர்களின் நிலையே இப்படி என்றால், மாநிலத்தின் இதர மாவட்டங்களில் உள்ள
அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்பதே பரவலான கருத்தாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.