பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) பிளவுபடுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
கர்நாடக ஜேடிஎஸ் மாநில தலைவர் இப்ராகிம், தன்னுடன் இருப்பவர்களே உண்மையானவர்கள் என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) ஜேடிஎஸ் இணையாது என்றும் கூறினார்.
ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய இப்ராகிம், எங்களுடன் வருபவர்கள் வாருங்கள். யார் வேண்டுமானாலும் போகலாம். எத்தனை எம்எல்ஏக்கள் யாருக்கு செல்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நான் கர்நாடக ஜேடிஎஸ் தலைவர். பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டேன். ஜேடிஎஸ், பாஜக கூட்டணியை நாங்கள் ஏற்கவில்லை என அவர் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் எச்.டி.தேவே கவுடா கட்சியின் தேசியத் தலைவராக இருக்கும் போது உங்களால் எப்படி முடிவெடுக்க முடியும் என்ற கேள்விக்கு பதிலளித்த இப்ராகிம், “அவருக்கு (எச்.டி. தேவகவுடா) தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா என எங்கும் அதரவு கிடையாது. குறைந்தபட்சம் எனக்கு கர்நாடகா உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் அவர் (எச்.டி.தேவே கவுடா) எப்படி தேசியத் தலைவராக முடியும்? எச்.டி.தேவே கவுடா எனது தந்தையைப் போன்றவர், எச்.டி.குமாரசாமி எனது இளைய சகோதரர் போன்றவர் எனவும் அவர் தெரிவித்தார்.







