திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளையில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் தனிப்படையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம் ஆகிய பகுதியில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி அதிலிருந்து 72 லட்சத்து 78 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். ஒரே நாளில் திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அரியானாவை சேர்ந்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி அரியானா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.
கடந்த பிப்ரவரி 21ம் தேதி திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை கும்பலின் தலைவன் முகமது ஆரிப் (வயது 35) மற்றும் ஆசாத் (வயது 37) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் அரியானாவில் கைது செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான ஆசிப் ஜாவித் என்பவனை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திக்கேயன் IPS தலைமையில் நியமிக்கப்பட்ட தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
கடந்த ஒரு மாத காலமாக புதுடெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேஷ் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தேடி வந்த நிலையில் இறுதியாக ஹரியானா ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்தது.
இந்த தகவலின் பெயரில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட தனிப்படையினர் அதிரடியாக துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கொள்ளையனை பிடித்து அவரிடமிருந்து ரூபாய் 15 லட்சம் ரொக்க பணம் மற்றும் மாருதி ஸ்விப்ட் கார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து விமானம் மூலம் கொள்ளையனை சென்னை அழைத்து வரப்பட்டு காவல் வாகனம் மூலம் திருவண்ணாமலை அழைத்து வந்தனர்.
இதனை அறிந்த தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திருவண்ணாமலை மாவட்ட தனிப்படையினருக்கு ஒரு லட்ச ரூபாய் வெகுமதி அளித்து பாராட்டினார்.







