திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.இதில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழில் வாழ்த்து கூறியுள்ளதோடு, இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும் என்ற உலகப்பொதுமுறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவர் பெருமகனார் அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.1333 திருக்குறள்களை எழுதி, அதன் மூலம் வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்ற, திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களுடைய உரைகளின்போது இன்றளவும் திருக்குறளை மேற்கொள் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பாரத பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் திருவள்ளுவர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதில் திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன.
திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன.
— Narendra Modi (@narendramodi) January 16, 2023
மேலும் இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். குறள் மிக நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
இவரைப்போலவே காங்கிரஸ் மூத்த அரசியல் வாதியும், அக்கட்சியின் தேசிய தலைவருமான மல்லிகார்ஜுனா கார்கேவும் திருவள்ளுவர் திருநாள் நல்வாழ்த்துக்கள். நன்னெறி, சமூக, அரசியல், பொருளாதார, சமய, தத்துவ, ஆன்மிக அறிவுகளின் களஞ்சியமான திருவள்ளுவருக்கு எங்கள் பணிவான வணக்கம்.இவரால் எழுதப்பட்ட திருக்குறள், மனித குலத்திற்கு ஒரு உத்வேகம் என கூறியுள்ளார்.
Warm greetings on Thiruvalluvar Day.
Our humble homage to the repository of ethical, social, political, economical, religious, philosophical, and spiritual knowledge — the great Thiruvalluvar.
Tirukkuṟaḷ, the exceptional text written by him, is an inspiration to humanity. pic.twitter.com/QtO6npVgCa
— Mallikarjun Kharge (@kharge) January 16, 2023
திருவள்ளுவர் தினம் உருவானது எப்படி?
திருவள்ளுவர் ,பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்ட காலத்தில் மதுரையை, நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் என்ற நபர் வாழ்ந்ததாவும், அவர் திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு,மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது. திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும், மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர், திருவள்ளுவரின் கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை மணம் முடித்து கொடுத்ததாக அறியப்படுகிறது.
இப்பேற்பட்ட திருவள்ளுவ பெருமகனாரை கவுரவப்படுத்தும் விதமாக 1921ஆம் ஆண்டு மறைமலை அடிகள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் சென்னை-பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி தமிழர்களுக் என ஒரு தனி ஆண்டு’ தேவை என கருதி உள்ளனர். அதனால் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றைப் பின்பற்றி, அதையே “தமிழ் ஆண்டு’ எனக் கொள்வதாகவும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவெடுத்தனர்.
அதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. எனினும் திருவள்ளுவர் பிறந்த வருடத்திற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. அவரை சமணர் என்றும் சைவர் என்றும் சிலர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.










