திருவள்ளூர் அருகே லாரிக்கு அடியில் படுத்து உறங்கிய கிளீனர் மீது லாரி ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் உத்தரப்பிரதேசத்தில் இருந்து லாரியை எடுத்து கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு ரோகித் யாதவ் என்ற லாரி கிளீனருடன் வந்துள்ளார்.
தொழிற்சாலைக்கு உள்ளே அனுமதி வழங்காத காரணத்தினால் தொழிற்சாலை அருகே லாரியை நிறுத்தி விட்டு இருவரும் ஓய்வெடுத்துள்ளனர். இதில் கிளீனர் ரோகித் யாதவ் லாரிக்கு அடியில் படுத்து உறங்கியுள்ளார். பின்னர் தொழிற்சாலைக்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஓட்டுநர் ராஜ்குமார், லாரியின் அடியில் கிளீனர் ரோகித் யாதவ் இருந்ததை கவனிக்காமல் லாரியை இயக்கியுள்ளார்.
இதையும் படியுங்கள் : விஏஓ கொலை வழக்கு; குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தூத்துக்குடி ஆட்சியர் உறுதி
இதனால் ரோகித் யாதவ் மீது சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. சம்பவ இடத்திலேயே ரோஹித் யாதவ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், ரோகித் யாதவ் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
– கோ. சிவசங்கரன்







