திருபுவனம் ராமலிங்கம் படுகொலை வழக்கில் தன்னையும் சேர்க்க NIA முறைகேடாக முயல்வதாக நசரத் பேகம் என்ற பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் 13 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். ஐந்து நபர்கள் தலைமறைவாக உள்ளனர். ராமலிங்கம் படுகொலை தொடர்பான வழக்கில், தொடர்புடைய நபர்கள் வீட்டில் கடந்த 23ஆம் தேதி NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதில் தலைமறைவாக உள்ள அப்துல் மஜீத் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. கும்பகோணம் மேலகாவிரியில் உள்ள இந்த வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவாக, அங்கிருந்து வெளிநாட்டு பணம், முக்கிய ஆவணங்கள் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக NIA தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், எங்கள் வீட்டில் அதுபோல் ஆவணங்களோ வெளிநாட்டு பணமோ ஏதும் இல்லை என்றும், NIA அமைப்பினரே கொண்டு வந்த ஆவணங்களை வைத்து விட்டு, இங்கு தான் இருந்தது என எங்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாகவும் அப்துல் மஜீத்தின் மனைவி நசரத் பேகம் இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் தன்னை இந்த வழக்கில் சேர்க்க NIA முயல்வதாகவும், இதனால் உயர் நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர உள்ளதாகவும் நசரத் பேகம் தெரிவித்துள்ளார்.







