தமிழகத்தில் தற்போது இருப்பது திமுக அரசு என்பதை விட சமூக நீதி அரசு என்றுதான் சொல்ல வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டில், அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டக் கூடிய வகையில் பல்வேறு சாதனைகள் நிகழ்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆட்சி நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் கொண்டவர் என்பதால், சிறப்பான நல்லாட்சி நிர்வாகத்தை கடந்த ஒராண்டு காலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளதாகவும், இந்திய அளவில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டக் கூடிய அளவிற்கு நிர்வாகத் திறனை அவர் கொண்டிருப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் ஏழை, எளிய மக்களுக்கும் சமூக நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கும் கல்வி, சுகாதாரம் கிடைத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாடுபடுவதாக தெரிவித்துள்ள திருமாவளவன், ஈழ தமிழர்களின் நலனை பாதுகாக்கும் நோக்கில் அங்குள்ள மக்களுக்காக உணவு பொருட்கள் வழங்க தமிழ்நாடு அரசு முன் வந்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாகவும், வன்முறையைத் தூண்டும் சக்திகளை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.








