தொழிலதிபர் ரத்தன் டாடாவை காதலித்து பின் கடைசிவரை அவருடன் நெருங்கிய நட்புறவை பாராட்டி வந்தவர் நடிகை சிமி கரேவால் ரத்தன் டாடாவின் இறப்பு பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பிரபல தொழிலதிபர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். இவரின் மறைவு அவரது குடும்பத்தை மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் ஒரு தொழில் தலைவராக மட்டுமின்றி, மனிதநேயமிக்க மனிதராகவும் செயல்பட்டவர் ரத்தன் டாடா. தனது வருமானத்தில் பாதியை அறக்கட்டளைகளுக்கு வழங்கியவர். தற்போது இந்த மனிதநேய பண்பாளரின் மறைவுக்கு அவரது உறவினர்கள், குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் கண்ணீர் செலுத்துகின்றனர்.

இயல்பான சுபாவம் , மனித நேய செயற்பாடுகள் , விலங்குகளின் மீதான பிரியம் என அவரது பல்வேறு குணங்கள் மக்கள் வியந்து பார்க்கப்படுபவை. சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேற நினைக்கும் ஒவ்வொரு இளைஞருக்கு ரத்தன் டாடா முன்னுதாரணமாக இருந்து வருகிறார். இனிமேலும் இருப்பார். உலகமே வியந்து பார்க்கும் ரத்தன் டாடாவின் தனிப்பட்ட வாழ்க்கை பலருக்கு ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. தனது வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தை தனிமையிலேயே கழித்திருக்கிறார் ரத்தன் டாடா.
இவரும் பாலிவுட் நடிகை சிமி கரேவாலும் சில காலம் காதலித்து பிரிந்தார்கள். காதல் உறவு முடிந்தாலும் கடைசி வரை இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். சிமி கரேவால் 1970-80 களில் பாலிவுட்டில் பிரபலமானவர். அந்த நேரத்தில் ரத்தன் டாடாவும் சிமி கரேவாலும் காதலித்து வந்துள்ளனர். அவர்கள் திருமணமும் செய்து கொள்ளப்போவதாக அப்போது கூறப்பட்ட நிலையில், சில காரணங்களால் அவர்கள் இருவருமே இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்தன் டாடாவின் இறப்பு சிமி கரேவாலுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு பெரிய இழப்பு. அதனை வெளிப்படுத்தும் வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் மிக உருக்கமாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார் சிமி. “நீங்கள் இறந்துவிட்டதாக கூறுகிறார்கள். இந்த இழப்பு தாங்கிக் கொள்ள முடியாத ஒன்று. போய் வா என் நண்பனே” என அவர் பதிவிட்டுள்ளார்.
ரத்தன் டாடா பற்றி பழைய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் ”அவர் ஒரு சிறந்த மனிதர். நேர்மையானவர். பணம் எப்போதும் அவருக்கு முதன்மையான ஊக்க சக்தியாக இருந்தது இல்லை. நகைச்சுவை உணர்வு கொண்டவர். ஒரு சிறந்த ஜென்டில்மேன். அவர் வெளிநாடுகளில் இருப்பது போல் இந்தியாவில் மன அமைதியோடு இருப்பதில்லை” என தெரிவித்துள்ளார்.







