தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள பொருளாதார வல்லுநர்கள் குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் ஏழைகள் பற்றி சிந்திப்பவர்களாகவும், ஏழைகளின் நலனை முன்னேற்றுவதற்கான பொருளாதாரசெயல் திட்டங்களை வகுப்பவர்களாக உள்ளனர். கொரோனா தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார சூழலில் இருந்து மாநிலத்துக்கு புத்துயிர் அளிக்கும் பணியில் இந்த குழு ஈடுபடும் என்ற நம்பிக்கை துளிர்விட்டிருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சருக்கு ஆலோசனை அளிக்கும் பொருளாதார ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், வளர்ச்சிக்கான பொருளாதார வல்லுநர் ஜான் ட்ரீஸ், மத்திய நிதித்துறை முன்னாள் செயலாளர் எஸ்.நாராயண் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.
எஸ்தர் டஃப்லோ

குழுவில் இடம் பெற்றுள்ள எஸ்தர் டஃப்லோ உலகளாவிய வறுமை ஒழிப்பில் முன்னுதாரணமான அணுகுமுறைக்காக 2019ம் ஆண்டு பொருளாதார நோபல் பரிசை தனது கணவரும் இந்தியருமான அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட மூவருடன் பகிர்ந்து கொண்டார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிறந்தவர் , அவரது தாய் ஒரு குழந்தைகள் நலனுக்கான மருத்துவர், தந்தை கணிதவியல் பேராசிரியராவார். பிரான்சில் உள்ள École Normale Superieure and elsewhere கல்வி நிறுவனத்தில் வரலாறு மற்றும் பொருளாதாரம் படித்தார். பின்னர் 1999ம் ஆண்டு மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
இந்தியரான சக பொருளாதார பேராசிரியரான அபிஜித் பானர்ஜியை திருமணம் செய்து கொண்டார்.
அனைத்து வடிவத்திலும் உலக அளவில் வறுமையை ஒழிக்க வேண்டியதே மனித சமுதாயத்தின் மிக முக்கியமான விஷயமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர். எளியவர்களுகான சமூக நலத்திட்டங்களில் அக்கறை காட்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருப்பது தமிழாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியும்.
ரகுராம் ராஜன்

குழுவில் இடம் பெற்றுள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை கோவிந்தராஜன், மத்திய அரசின் உளவுப்பிரிவில் பணியாற்றியவர் .ரகுராம் ராஜன் சர்வதேச நிதியத்தின் ஏழாவது தலைமை பொருளாதார வல்லுநராகப் பணியாற்றியவர். பொருளாதார வல்லுநரான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது ஆட்சி காலத்தில் இவரை ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமித்தார். 2016ம் ஆண்டு நவம்பரில் நரேந்திரமோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தவர்.
ரிசர்வ் வங்கி தரப்பில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக பின்னர் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின் இவரை தேர்வு செய்திருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
அரவிந்த் சுப்ரமணியன்

குழுவில் இடம் பெற்றுள்ள அரவிந்த் சுப்ரமணியனும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் உள்ள டிஏவி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். பணமதிப்பிழப்பு, பொருளாதார சீர்திருத்தம் போன்ற மோடி அரசின் முக்கிய முடிவகளின் பின்னணியில் இடம்பெற்றிருந்தவர். ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுடன் நெருக்கமாக இருந்தவர். ரகுராம் ராஜன் சர்வதேச நிதியத்தின் ஏழாவது தலைமை பொருளாதார வல்லுநராகப் பணியாற்றிய போது சர்வதேச நிதியத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். பெரும்பாலும் பேராசிரியராக, பிரபல பொருளாதார பத்திரிகைகளின் கட்டுரையாளராக அரவிந்த் சுப்ரமணியன் அறியப்பட்டுள்ளார்.
ஜான் ட்ரீஸ்

குழுவில் இடம் பெற்றுள்ள வளர்ச்சிக்கான பொருளாதார வல்லுநர் ஜான் ட்ரீஸ் பெல்ஜியத்தில் பிறந்தவர். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தேசிய ஆலோசனை கவுன்சிலின் உறுப்பினராகப் பணியாற்றியவர். மற்ற எந்த பொருளாதார வல்லுநர்களை விடவும் ஏழைகளைப் பற்றியே சிந்திபவர். இந்தியாவை மிகவும் நேசிப்பவர். 1979ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் வசித்து வரும் இவர். 2002ம் ஆண்டு முதல் இந்திய குடியுரிமை பெற்று விட்டார். ஏழை மக்களின் சிரமங்களைப் புரிந்து கொள்வதற்காக குடிசைப் பகுதிகளில் வாழ்ந்தவர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் ஏழைகளுக்கான நலத்திட்டங்களை வகுப்பதில் முக்கிய பங்கு வகிப்பார் என்று தெரிகிறது.
எஸ்.நாராயணன்

குழுவில் இடம் பெற்றிருக்கும் எஸ்.நாராயணன் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியாவார். 1965ம் ஆண்டில் இருந்து நாற்பது ஆண்டுகளாக மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர். குறிப்பாக பிரதமர் நரேந்திரமோடியின் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றியவர். மத்திய நிதித்துறையின் முன்னாள் செயலாளராகவும் பணியாற்றியவர். இவர் குழுவின் ஆலோசனைகளை ஒருங்கிணைப்பதற்கு இவரது பணி அவசியமானது என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது.







