சூடானில் உள்நாட்டு போர் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா சூடான் இடையேயான உறவில் விரிசல் இல்லை என இந்தியாவுக்கான சூடானிய தூதர் பேட்டி அப்தல்லாஹ் உமர் பஷீர் அல் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் அதிகாரப் போட்டியின் ஒரு பகுதியாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே தொடங்கிய மோதல் போக்கு தற்போது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. கடந்த ஏப்ரல் 15−ம் தேதி முதல் சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் பிற பகுதிகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இந்த உள்நாட்டு போரின் காரணமாக ஏராளமான இந்தியர்கள் சூடானில் சிக்கியுள்ளனர். சூடானின் தலைநகர் கார்ட்டூமில் சண்டை அதிகரித்துள்ளதையடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதையடுத்து, சூடானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படியும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
சூடான் போர் நிலவரம் மற்றும் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க “ஆபரேசன் காவிரி” எனும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சூடானில் சிக்கியுள்ள 3,000 இந்தியர்களை மீட்க “ஆபரேசன் காவிரி” திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.
மேலும் சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் இரண்டு கனரக ராணுவ போக்குவரத்து விமானங்களும், சூடானில் உள்ள முக்கிய துறைமுகத்தில் ஒரு கடற்படை கப்பலையும் இந்தியா நிறுத்தி உள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திர்கு பேட்டி அளித்த இந்தியாவுக்கான சூடானிய தூதர் அப்தல்லாஹ் உமர் பஷீர் அல் ஹுஸைன் தெரிவித்ததாவது.. “ சூடானில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்நாட்டு போரினால் சூடானுக்கும் இந்தியா மற்றும் வட கிழக்கு ஆப்ரிக்க நாடுகளுக்கும் இடையிலான உறவில் எந்த எதிர் மறையான விளைவுகளும் ஏற்படவில்லை. மாறாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் நல்ல முன்னேற்றங்கள் அடைந்துள்ளன.
இந்தியாவும் சூடானும் நிறைய கலாச்சார ஒற்றுமைகள் மற்றும் பன்முகத்தன்மையை கொண்ட நாடுகளாகும். இந்தியாவிற்கும் சூடானுக்கும் இடையே சிறப்பு வாய்ந்த உறவுகள் உள்ளன. சூடானில் உள்ள சில சமூகங்கள் இந்தியாவில் இருந்து நூறு வருடங்களுக்கு முன்பு இங்கு குடிபெயர்ந்தவர்கள். நீண்ட காலம் இங்கேயே அவர்கள் வாழ்ந்து வந்ததால் அவர்கள் சூடானியர்களாக மாறிப் போனார்கள்.
இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் காவேரியின் கீழ், 530க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். சூடான் ராணுவத் தலைவர் ஜெனரல் அப்தல் ஃபத்தாஹ் அல்-புர்ஹான் மற்றும் அவரது போட்டியாளரும் துணை ராணுவ ஆதரவு படைகளுக்கு (RSF) தலைமை தாங்கிய ஜெனரல் முகமது ஹம்தான் டாக்லோவும் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
நான் 24 மணிநேரமும் மீட்பு பணிகள் நடைபெறும் இடங்களில் அவர்களுக்கு நெருக்கமாக பணியாற்றி வருகிறேன். மீட்பு பணிகளில் ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பது, விமானங்களுக்கு தேவையான அனுமதிகளை வழங்குவது, கப்பல்களை சூடானில் தரையிறங்க செய்து இந்திய குடிமக்களை திரும்ப அழைத்து வருதல் என பல மீட்பு நடவடடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என அல் ஹுஸைன் தெரிவித்தார்.







