இரு கட்சிகளுக்கு இடையே பிரச்னை கிடையாது என்றும் இரு தலைவர்களுக்கு இடையே தான் பிரச்னை என அதிமுக பாஜக கூட்டணி விரிசல் குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசை கண்டித்து தேமுதிக சார்பில் தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
50 ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி பிரச்னைக்கு இன்று வரை தீர்வு காண முடியவில்லை. எத்தனையோ பிரதமர்கள், முதல்வர்கள் வந்தாலும் ஆட்சி மாறியதே தவிர, காட்சி மாறவில்லை. அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க வேண்டும்.
காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம். அனைத்து நதிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தேர்தலுக்கு 6 மாதங்கள் உள்ளன. இரு கட்சிகளுக்கு இடையே பிரச்னை கிடையாது. இரு தலைவர்களுக்கு இடையேதான் பிரச்னை. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை. கூட்டணி தொடர்பான விஷயத்தில் தேமுதிக உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுக்கும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.







