எலியை அடிக்க சென்ற பெண் இரும்பு கேட்டில் மோதி பலி

பல்லாவரம் அருகே எலியை அடிக்க துரத்தி சென்ற பெண் வீட்டின் இரும்பு கேட்டில் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளிவந்துள்ளன. சென்னை பல்லாவரத்தை அடுத்த…

பல்லாவரம் அருகே எலியை அடிக்க துரத்தி சென்ற பெண் வீட்டின் இரும்பு கேட்டில் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளிவந்துள்ளன.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர், மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்(43) இவரது மனைவி லட்சுமி(36). செந்தில் சரக்கு வாகன ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு 12 வயது மகன் உள்ளார். இவர்களது வீட்டில் சமீப நாட்களாக எலிகள் தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் ஒரு எலி ஓடுவதை பார்த்த லட்சுமி அதை அடிப்பதற்காக கட்டை ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு, எலியை துரத்தி வேகமாக ஓடியுள்ளார். ஆனால் எலி வேகமாக ஓடிவிட்டது.

அப்பொழுது எதிர்பாராத விதமாக லட்சுமி, வீட்டில் இருந்த கிரில் கேட் மீது மோதியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அவர், துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் லட்சுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எலியை அடிக்க துரத்திச் சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.