ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை முதன் முறையாக இழந்துள்ளது இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள இந்தியா உள்பட 8 அணிகள் ஏற்கனவே நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டம் ஜிம்பாப்வேயில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஏ பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, நெதர்லாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும், பி பிரிவில் இருந்து இலங்கை, ஸ்காட்லாந்த், ஓமன் ஆகிய அணிகளும் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.
லீக் சுற்றில் குவித்த வெற்றிகளின் அடிப்படையில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் போனசாக தலா 4 புள்ளிகளுடன் சூப்பர் 6 சுற்றில் களம் இறங்கின. மேற்கிந்தியத் தீவுகள் அணியானது ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகளிடம் தோல்வி அடைந்ததால் புள்ளிகள் ஏதும் இல்லாமல் களம் இறங்கியது. இதனால் சூப்பர் சிக்ஸ் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறுவது சந்தேகம் என்ற நிலை உருவானது.
இந்நிலையில் ஹராரே நகரில் நேற்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் சுற்றில், மேற்கிந்தியத் தீவுகள் அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியானது 43.5 ஓவர்களில் 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 182 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 43.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஸ்காட்லாந்து வெற்றி பெறுவது இதுவே முதன் முறையாகும். இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாகும் வாய்ப்பை இழந்தது. இதனால் இரண்டு முறை உலக்கோப்பையை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி இல்லாமல் இம்முறை உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணி உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாகாதது இதுவே முதன்முறையாகும்.







