திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே வடிவேலு திரைப்பட காமெடி பாணியில் கிணற்றை காணவில்லை என கிராம மக்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள சந்திரசேகரபுரம் என்னும் கிராமத்தில் மொத்தம் ஏழு குளங்கள் இருந்ததாகவும் அதற்கு சான்றாக கிராம நிர்வாக அதிகாரி பாண்டியன் கையொப்பம் இட்ட சான்றிதழும் உள்ளன. இந்நிலையில், சந்திரசேகரபுரம் ஊராட்சி கட்டுப்பாட்டில் ஆறு குளங்களே இருப்பதாகவும், ஒரு குளம் இருந்த இடமே தெரியாமல் வாழைத்தோப்பாக மாறியுள்ளாதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் அந்த புகார் மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்களே தெரிவிக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குளத்தை காணவில்லை என போஸ்டர் ஒட்டியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என தெரிந்ததும், கிராம மக்கள் இணைந்து அப்பகுதி முழுவதும் கிணற்றை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். வடிவேலு திரைப்பட காமெடி போன்று கிராம மக்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது குறித்து தெரிவித்த கிராம மக்கள், சந்திரசேகரபுரம் கிராமத்தில் பழமையான அகத்தீஸ்வரர் ஆலயத்தின் எதிரே இருந்த குளம், தற்போது இருந்த இடம் தெரியாமல் வாழைதோப்பாக மாறியுள்ளதாக கூறினர். விவசாய நிலப்பரப்பை அந்த கிராமத்தில் வசிக்கும் பருவதம்மாள் என்பவர் நிர்வாகித்து வந்த நிலையில், தற்போது அந்த குளம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனதை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காணாமல் போன குளத்தை கண்டுப்பிடித்து, மறுபடியும் தூர்வாரி தருமாறும் அப்பகுதி மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.







