தங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள் என பாதிக்கப்பட்ட சின்னத்துரையின் தாயார் அம்பிகாபதி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவைச் சேர்ந்தவர்கள் முனியாண்டி-அம்பிகாபதி தம்பதி. கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 17 வயதில் சின்னதுரை என்ற மகனும், 14 வயதில் சந்திரா செல்வி என்ற மகளும் உள்ளனர். வள்ளியூரில் உள்ள அரசு பள்ளியில் இவர்கள் இருவரும் 12 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். பள்ளியில் சக மாணவர்களுக்கிடையே ஜாதி ரீதியாக ஏற்பட்ட பிரச்னையில் சின்னத்துரை ஒரு வாரம் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 9 ஆம் தேதி பள்ளி நிர்வாகத்தினர், சின்னதுரையின் பெற்றோரை தொடர்புகொண்டு மகனை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளனர். பள்ளிக்குச் சென்ற சின்னத்துரையிடம் பள்ளிக்கு வராதது குறித்து ஆசிரியர்கள் விசாரித்தபோது தன்னை சில மாணவர்கள் ஜாதி ரீதியாக கேலி, கிண்டல் செய்வதால் பள்ளிக்கு வர விரும்பவில்லை என சின்னதுரை ஆசிரியர்களிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்ட ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் பள்ளி முடிந்த பின், சின்னதுரையை மடக்கி மிரட்டியுள்ளனர். பெற்றோர் கூலி வேலைக்குச் சென்றிருந்ததால் வீட்டிற்கு சென்ற சின்னதுரையும், அவரது சகோதரி சந்திரா செல்வியும் வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது.
அப்போது வீட்டிற்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல், சின்னதுரையை சரமாரியாக வெட்டியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தங்கை சந்திரா செல்வி அவர்களை தடுக்க முயன்றபோது, அவருக்கும் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் இன்று ஒரு சிறுவனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை முயற்சி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒன்பது பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக நியூஸ் 7 தமிழ் வாயிலாக பேட்டியளித்துள்ள பாதிக்கப்பட்ட சின்னத்துரையின் தாயார் அம்பிகாபதி, தன் கண் முன்னே மகனையும், மகளையும் வெட்டி விட்டதாக கூறினார். இந்த ஊரில் தங்களால் வாழ முடியாது என தெரிவித்த சின்னத்துரையின் தாயார் அம்பிகாபதி, முதலமைச்சர் தகுந்த பாதுகாப்பு வழங்குவதாக உறுதியளித்திருப்பதாகவும் கூறினார்.








