அமெரிக்க அதிபரை விடாது துரத்தும் கொரோனா

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், மீண்டும் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், மீண்டும் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு மருத்துவர்களின் ஆலோசனை படி ஓய்வெடுத்தார். பின்னர் சில நாட்களிலேயே தொற்று பாதிப்பில் இருந்து அவர் குணமடைந்தார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்தது.

 

இதனால், தனிமையில் இருந்து வெளியே வந்து வழக்கமான பணிகளில் ஜோ பைடன் ஈடுபட்டார். மேலும் சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடன் அவர் தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணிநேரத்திற்கு மேல் நீடித்ததாகவும், இதில் தைவான் விவகாரம், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

விரைவில் இருநாட்டு அதிபர்களும் நேரில் சந்திக்க போவதாக முடிவு செய்யப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோ பைடன் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார் என்று மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

 

இதனிடையே, தனக்கு இரண்டாவது முறை பாதிப்பு ஏற்பட்டது குறித்து ஜோ பைடன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், தனக்கு மீண்டும் பாசிடிவ் என முடிவு வந்துள்ளது. நான் நலமாகத்தான் உள்ளேன். இருப்பினும் மற்றவர்களின் பாதிப்பை கருத்தில் கொண்டு வீட்டில் இருந்தே பணியாற்றவுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.