நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை போராட்டம் ஓயாது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட பகுதி கழக செயலாளருமான இராமலிங்கம்…

நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட பகுதி கழக செயலாளருமான இராமலிங்கம் இல்லத் திருமண விழா அண்ணா நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

“இந்த மணவிழாவில் பங்கேற்று மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைத்து, அவர்களை வாழ்த்தும் வாய்ப்பை பெற்றிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இதுபோன்ற சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வில் கலந்து கொள்வேன்.

இது போன்ற சீர்திருத்த திருமணங்கள் 1967 க்கு முன் வரை சட்டப்படி செல்லுபடியாகாது. அதற்கு பின் நடந்த பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று வந்த பின் அண்ணா பொறுப்பேற்று முதலமைச்சராக சட்டமன்றத்தில் கொண்டு வந்த முதல் தீர்மானம் சீர்த்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்பது தான்.

முன்பெல்லாம் யாராக இருந்தாலும் பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மூலம் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற முடியும். நீட் தேர்வை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். பாஜக வந்ததும் நீட் தேர்வை கொண்டு வர முயற்சி எடுத்தது.
எதிர்கட்சியாக இருந்த போது கூட நீட் தேர்வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட  போது திமுக ஆதரவு அளித்தது. ஆனால் அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் செல்லுபடி ஆகாமல் போனது. . அதனால் தான் தேர்தல் நேரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா கொண்டு வரப்படும் என்று தெரிவித்தோம்.

ஆட்சிக்கு வந்த பின் மீண்டும் தீர்மானம் கொண்டு வந்தோம் அதிமுக கூட ஆதரித்தது, அப்போது இருந்த ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டது,  தற்போது இருக்கும் ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.தற்போது குடியரசு தலைவரிடம்  மசோதா உள்ளது. ஒன்றிய அரசின் ஆலோசனை பெற்ற பின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு தான்  உள்ளது. ஜனாதிபதி தான் ஒப்புதல் தர வேண்டும். ஆளுநருக்கு போஸ்ட் மேன் வேலை தான்.

ஆளுநர் நிகழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர் ஒருவர் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பினார். நீட் தேர்வுக்கு விலக்கு கேட்ட போது அது எல்லாம் முடியாது என்று ஆளுநர்  சொல்கிறார். என்னிடம் அதிகாரம் இருந்தாலும் அனுமதி தர மாட்டேன் என்று வெளிப்படையாக சொல்கிறார்.

நீட் தேர்வுக்கு விலக்கு பெரும் வரையில் திமுகவின் போராட்டம் ஓயாது. தமிழ்நாட்டில் திமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்து விடியலை ஏற்படுத்தியது போல, நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுக்கு உறுதுணையாக நின்று இந்தியாவுக்கு விடியலை ஏற்படுத்துங்கள். திமுக ஆட்சியை எந்த கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.