முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

திராவிட பேரழகி சில்க் ஸ்மிதாவின் கதை

“வறுமையின் கோரப் பிடியிலும்
ஒழுங்காக உன்னால்
உடுத்திக் கொள்ள முடியவில்லை!
வசதியின் வாழ்க்கை படியிலும்
ஒழுங்காக உன்னால்
உடுத்திகொள்ள முடியவில்லை”

கவிஞர் மு. மேத்தாவின் இந்த வரிகளுக்குள் புதைந்து கிடக்கும் உண்மைகள் தான் சில்க் சிமிதாவின் வாழ்க்கை மர்மங்களுக்கான விடைகள். ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு என்ற கிராமத்தில் பிறந்தவர் தான் சில்க் ஸ்மிதா … தமிழை பூர்வீகமாக கொண்ட அவரது இயற்பெயர் விஜயலெட்சுமி… இறக்கும் போது பெயரோடும், புகழோடும் மறைந்து போன சில்க் ஸ்மிதாவின் ஆரம்ப கால கட்ட வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியானதல்ல… வறுமையின் கோர பிடியில் சிக்கி தவித்தது விஜயலெட்சுமியின் குடும்பம். ஆனாலும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் விஜயலெட்சுமியிடம் அதிகமாகவே இருந்தது. வறுமையின் தாக்கத்தால் 4ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை விடுத்த விஜயலெட்சுமிக்கு, சினிமா மீதான ஆர்வம் மட்டும் குறைந்த பாடில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குடும்ப சூழலால் சிறு வயதிலேயே விஜயலெட்சுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. கணவன் மற்றும் மாமியாரின் தொந்தரவால் வாடிய விஜயலெட்சுமி வழி தெரியாமல் திக்கு முக்காடி கொண்டிருந்தார். சினிமாவில் சாதிக்க என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருந்த விஜயலெட்சுமிக்கு வறுமை தீராத வலியை தந்து கொண்டிருந்தது. வேறு வழியின்றி வறுமையை சமாளித்து தனது கனவையும் நிறைவேற்றி கொள்வதற்காக சென்னையை தேர்ந்தெடுத்தார் விஜயலெட்சுமி. தனது உறவினர்கள் வீடுகளில் தங்கி இருந்து கிடைத்த வேலைகளை செய்து கொண்டு, பசியை போக்கி கொண்டே சினிமா வாய்ப்பை எதிர் நோக்கி கொண்டிருந்தார்.

அந்த வேளையில், 1980ம் ஆண்டு வினு சக்கரவர்த்தியின் உதவியால் வண்ணடிச்சக்கரம் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது விஜய லெட்சுமிக்கு… சாவித்திரி, சுஜாதா, சரிதா போல நல்ல கதாபாத்திரம் ஏற்று நல்ல நடிகையாக பெயர் வாங்க வேண்டும் என்பதே விஜயலெட்சுமியின் விருப்பம். ஆனால் முதல் படமே அவருக்கு அப்படி அமைந்து விடவில்லை. வண்டிசக்கரம் படத்தில், சாராயம் விற்கும் பெண் வேடம். படத்தில் விஜய லெட்சுமியின் பெயர் சில்க். ஆனால் கிடைத்த பாத்திரத்தில் கச்சிதமாக நடித்தார் விஜயலெட்சுமி…

வண்டி சக்கரம் படத்திற்கு பின்னர் விஜய லெட்சுமியின் வாழ்க்கை பாதையில் மாற்றம் தொடங்கியது. அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கினார். ஸ்மிதா என பெயரை மாற்றி கொண்டாலும், முதல் படத்தில் கிடைத்த சில்க் என்ற பெயர் அவரோடு ஒட்டி கொண்டது. கவர்ச்சி நடிகை என்ற பட்டம் கிடைத்தாலும், கொஞ்சமும் கவலை படாமல், அவற்றை தாண்டி தனது பாதையில் முன்னேறி கொண்டிருந்தார் சில்க் ஸ்மிதா… சொக்க வைக்கும் கண்களும், ஆடவரை கவர்ந்திழுக்கும் உடல் வனப்பு என இந்திய சினிமாவை புரட்டி போட்டார் சில்க் ஸ்மிதா.

“ஏவிஎம் ஸ்டுடியோ முன்னால் நின்று கொண்டிருந்த போது 16, 17 வயது மதிக்கதக்க ஒரு பெண் என்னை கடந்து சென்றாள். அவளது கண்கள் என்னை ஆச்சர்யபடுத்தியது..” சில்க் ஸ்மிதாவை சினிமாவில் அறிமுகப்படுத்திய நடிகர் வினு சக்ரவர்த்தி வியந்து தெரிவித்த வார்த்தைகள் இவை.

வினு சக்கரவர்த்தியின் வார்த்தைகள் அப்படியே நிஜமானது. தமிழ் சினிமாவிற்கு கவர்ச்சி நடிகைகளும், குத்தாட்டமும் புதிதல்ல. ஆனால் ஒரு கவர்ச்சி நடிகையை ஒட்டு மொத்த திரை ரசிகர்களும் கொண்டாடினார்கள் என்றால் அது நிச்சயமாக சில்க் ஸ்மிதாவாக மட்டுமே இருக்க முடியும். காரணம் அவரது விழி மொழி, உடல் மொழி என ஆயிரம் காரணங்களை கூறி கொண்டே செல்லலாம்.

திரைப்படங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறினார் சில்க் ஸ்மிதா. கமல் ரஜினி என அத்தனை உச்ச நட்சத்திரங்களின் படத்திலும் சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி அவசியமாகி போனது. நாயகர்களுக்காக 50 சதவீத வியாபாரம் நடந்தது என்றால் மீதி 50 சதவீதம் சில்க் ஸ்மிதா என்றாகி போனது. எப்படியாவது சில்க் ஸ்மிதாவை படத்திற்கு புக் செய்து விடுங்கள் என தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் கட்டளை இட தொடங்கினர். திரையரங்குகளில் கதாநாயகர்களை தாண்டி, சில்க்கிற்காக கோஷம் எழுப்பினார்கள் என்றால், எந்த அளவிற்கு ரசிகர்களை கட்டி போட்டிருந்தார் என்பதை உணர முடியும்.

தமிழ் சினிமாவில் அன்றும், இன்றும் எந்த ஒரு நடிகைக்கும் கிடைக்காத இடம் அது. சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டிற்காக ஒட்டு மொத்த திரையுலகமும் காத்து கிடந்தது. ஒட்டு மொத்த இந்திய திரையுலமும் கொண்டாடும் நாயகியாக மாறி போனார் சில்க் ஸ்மிதா. யார் இந்த பெண் என அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியே சில்க்கை பற்றி கேட்ட நிகழ்வுகளும் அரங்கேறின.

கிளுகிளுப்பு, அழகுணர்ச்சி, நடிப்பிற்கான அடையாளம் என பல்வேறு விதமாக சில்க் ஸ்மிதாவை கொண்டாடியது இந்திய திரையுலகம். பெண்களே வியக்கும் அழகு என்ற சொல்லாடலை அதிகம் கேட்டிருப்போம். ஆனால் அந்த சொல்லிற்கான அடையாளமாக மாறி இருந்தார் சில்க் ஸ்மிதா. ஆம் கவர்ச்சி நடிகைகளை வெறுத்து ஒதுக்கிய பெண்கள் கூட சில்க் ஸ்மிதாவிற்கு ரசிகர்களாக இருந்தனர் என்பது தான் அவருக்கு கிடைத்த ஆக பெரிய அங்கீகாரம்.

புகழின் உச்சியில் இருந்தாலும், அத்தனை நடிகர்களோடு ஆட்டம் போட்டாலும், சினிமா உலகில் அவருக்கான நட்பு வட்டாரம் மிகச்சிறியது. தனக்கான நட்பு வட்டாரத்தை பெருக்கி கொள்ள சில்க் ஸ்மிதா விரும்பியதில்லை. காரணம், கவர்ச்சி நடிகை என்பதால் அவரை பாலியல் ரீதியாக அனுபவிக்கவே துடித்து கொண்டிருந்தது ஒரு கூட்டம். அதன் காரணமாகவே தனக்கான நட்பு வட்டாரத்தை சுருக்கியே வைத்திருந்தார். அதுவே தனக்கு பாதுகாப்பு என்றும் எண்ணினார் சில்க் ஸ்மிதா.

இதன் காரணமாகவே சில்க் ஸ்மிதா திமிர் பிடித்தவர் என்ற பெயர் கோடம்பாக்கத்தில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகு எங்கும் பரவலாகத் தொடங்கியது. ஒருமுறை சிவாஜி கணேசன் உடனான படப்பிடிப்பு. சிவாஜிகணேசன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த போது ஒட்டு மொத்த படக்குழுவும் எழுந்து நின்று மரியாதை செய்தது. எதனை பற்றியும் கவலைப்படாமல் அமர்ந்து கொண்டிருந்தார் சில்க் ஸ்மிதா. என்னவொரு ஆணவம் சில்க் ஸ்மிதாவிற்கு என ஒட்டு மொத்த திரையுலகமும் அவரை வசைபாட தொடங்கியது. ஆனால் நான் எழுந்து நின்றால், எனது ஆடை கண்டு சிவாஜிகணேசன் சங்கடப்பட நேரிடும் அதனாலேயே அமர்ந்திருந்தேன் என பதிலளித்தார் சில்க் ஸ்மிதா.

உச்ச நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெற்றாலும், தனது தொழிலுக்கும், சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் எப்போதும் நியாயம் செய்ய வேண்டும் என்பதே சில்க் ஸ்மிதாவின் எண்ணம்.

தன்னை கவர்ச்சி கன்னியாக தமிழ் திரையுலகம் காட்டி கொண்டிருந்தாலும், அவருக்குள் இருந்த நடிப்பு திறமை கொண்டாடப்படவில்லை என்பது சில்க் ஸ்மிதாவிற்குள் கடைசி வரை இருந்த வருத்தம். ஆம் சில்க் ஸ்மிதாவின் நடிப்பிற்காக எத்தனையோ படங்களை அடுக்கி கொண்டே சென்றாலும், அலைகள் ஓய்வதில்லை, அன்று பெய்த மழையில் போன்ற படங்கள் சிலக் ஸ்மிதா என்ற நடிகையின் மறுபக்கத்தை பிரதிபலிக்கும் திரைப்டங்கள்.

கிறித்துவப் பெண்ணாய், கணவனின் ஆணாதிக்கம் எதிர்த்து, காதல் கலப்புத் திருமணம் செய்து வைக்கும் குடும்ப பெண்ணாய் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அசத்தி இருப்பார் சில்க் ஸ்மிதா. எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் தன்னால் அதனை நடித்து விட முடியும் என தமிழ் திரையுலகிற்கு காட்டி விட்டே சென்றிருக்கிறார் சில்க் ஸ்மிதா. ரகசியப் போலீஸ் என்ற திரைப்படத்தில், பாவா, பாவா என கொஞ்சும் சில்க் ஸ்மிதாவின் குரல் தான், அலைகள் ஓய்வதில்லையில் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் கம்பீர குரலாக வெளிப்பட்டது.

நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேக்குதம்மா போன்ற திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்த சில நல்ல கதாபாத்திரங்களின் மூலம் தனக்கு கவர்ச்சி மட்டுமின்றி அனைத்துவிதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என ஆணித்தரமாக நிரூபித்தார் சில்க் ஸ்மிதா. லயனம் என்கிற திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவரது மற்றொரு வித்தியாசமான பரிணாமத்தினை உலகிற்கு எடுத்து காட்டியது. இந்தப் படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரது மற்றொரு நல்ல படமான பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கமலஹாசன், ஸ்ரீதேவியுடன் இணைந்து இவர் நடித்த இந்த படம் ஹிந்தியிலும் சத்மா என்கிற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது. பாரதிராஜா, பாலுமகேந்திராவின் திரைப்பட உருவாக்க பணிகள் கண்டு மெய்சிலிர்த்தவர்களில் சில்க் ஸ்மிதாவும் ஒருவர். தன்னுடன் பணியுரிபவர்களிடம் பாலுமகேந்திரா குறித்து பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் சில்க் ஸ்மிதா.

உன்னை விட பெரிய கலைஞரை எனக்கு அறிமுகப்படுத்து என்று கமல்ஹாசனிடம் அவரது தந்தை கூற, நேரடியாக சில்க் ஸ்மிதாவை அழைத்து சென்று கமல் அறிமுகப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சில்க் ஸ்மிதாவின் நடிப்பு திறமை தமிழ் சினிமா பயன்படுத்த தவறிவிட்டது என்றே கூறவேண்டும். குடும்பப் பாங்காக நடிக்க விரும்பிய என் அக்காவை சொத்துக்காக சில்க் ஸ்மிதா என்ற கவர்ச்சி நடிகையாக்கிவிட்டனர் என்ற சில்க்கின் தம்பி நாகவர பிரசாத்தின் வார்த்தைகள் இங்கே கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை.

ஒருபுறம் தமிழ் சினிமா அவரை கொண்டாடி கொண்டிருந்தாலும் மறுபுறம் சில்க் ஸ்மிதாவை விமர்சித்தது ஒரு தரப்பு. வெக்கம் இல்லாதவள் , மானம் கெட்டவள் என்றும் பட்டமளித்தனர். ஆனால் தமிழ் திரையுலகை விட மலையாள திரையுலகை அதிகமாக நேசித்தார் சில்க் ஸ்மிதா. காரணம், தமிழ் திரையுலகம் சில்க் ஸ்மிதாவை கவர்ச்சிக்காக கொண்டாடிய காலகட்டத்தில், அவரது நடிப்பை கொண்டாடியது மலையாள திரையுலகம். பெரும்பாலும் கதையம்சம் கொண்ட, நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கொண்ட படங்களே அவரை தேடி வந்தன. `இணையே தேடி’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமான சில்க் ஸ்மிதா. தனது கடைசி காலகட்டம் வரை அந்த மொழி ரசிகர்களோடு நெருங்கியே இருந்தார்.

குறுகிய காலகட்டத்தில் 450க்கும் அதிகமான படங்களை நடித்திருந்தாலும், கோடிகளில் சம்பளம் பெற்றிருந்தாலும், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் ஒரு வித வெறுமை அவரை துரத்தி கொண்டே இருந்தது. ரசிகர்களின் கண்களுக்கு கிளுகிளுப்பூட்டிய சில்க் ஸ்மிதாவின் சொந்த வாழ்க்கை இருள் நிறைந்த பக்கங்களையே கொண்டிருந்தன. குடும்ப வாழ்க்கை மீது அதீத ஆர்வம் கொண்ட சில்க் ஸ்மிதாவிற்கு அது கடைசி வரை கனவாகவே இருந்தது. சில்க் ஸ்மிதாவோடு உறவாடிய ஆண்கள் அனைவரும் அவரது உடலுக்காவே நெருங்கினர். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் பலர் வந்தனர்.. ஆனால் எதிர்பார்த்த அன்பு கடைசி வரை கிட்டாமல் போனது சில்க் ஸ்மிதாவிற்கு. இது வரை ஒரு நல்ல ஆணை கூட நான் பார்க்கவில்லை என்ற சில்க்கின் வார்த்தைகளில் பொதிந்திருக்கும் அர்த்தங்கள் ஏராளம்.

தான் ஒரு போக பொம்மையாகவே பார்க்கப்படுகிறேன் என்பதை பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார் சில்க் ஸ்மிதா. அவரது காலகட்டங்களில் படப்பிடிப்பு தளங்களில் கேரவன்கள் இருப்பது இல்லை. அதனால் வெளிப்புறப் படப்பிடிப்பின்போது நடிகைகள் பெரும் அவதிக்குள்ளாவது உண்டு. ஒரு தனியான இடத்தைக் கண்டுபிடித்து சிறுநீர் கழித்துவிட்டு திரும்பி பார்த்தேன். எனக்கு அருகாமையில் இருந்த சுவரிலும், மரக்கிளைகளிலும் ஆண் உருவங்கள் என வேதனையோடு பகிர்கிறார் சில்க் ஸ்மிதா.

கவர்ச்சி நடிகையாக பார்க்கப்பட்டதாலோ என்னவோ சில்க் ஸ்மிதாவின் இன்னொரு முகம் மிகப்பெரிய அளவில் அறியப்படாமல் போயிற்று. உங்களுக்கு நிறைவேறாத ஆசை என்று ஏதேனும் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார் பத்திரிகையாளர் ஒருவர். நான் ஒரு ‘நக்சலைட்’ ஆக வேண்டும் என்று எனக்குள் ஆசை வளர்த்தேன். பிரச்சினைகளின் காரணமாக என் வாழ்க்கை திசைமாறிப் போனது. ஆனால், அந்த நெருப்பு என் நெஞ்சில் இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது!’’ என பதிலளித்தார் சில்க் ஸ்மிதா. தேசம் கொண்டாடும் ஒரு நடிகை நக்சலைட்டு ஆக ஆசை என கூறியதை கேட்டு அதிர்ந்து போனார் அந்த நிருபர்.

நக்சலைட்டு என்றால் தேடப்படும் குற்றவாளி என நிருபர் கூறஅரசாங்கத்தால் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நம்மைவிட, தேடப்படும் குற்றவாளிகள் சுதந்திரமானவர்கள் என்று தான் நினைக்கிறேன் என பதிலளித்தார் சில்க் ஸ்மிதா.

‘ராணுவ பலத்தில் நின்ற பட்டேல் இரும்பு மனிதரா? ராணுவத்தை எதிர்த்து நின்ற எளிய மக்கள் இரும்பு மனிதர்களா…?’’ என என்னிடம் சில்க் ஸ்மிதா வினவினார் என்ற கம்யூனிஸ்ட் தோழர் இளவேனிலின் வரிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சமூகம் சார்ந்த விவகாரங்களில் சில்க் ஸ்மிதாவின் பார்வை ஒடுக்கப்பட்டவர்கள் பக்கமே இருந்தது என்பதற்கான உதாரணங்கள் இவை.

தர்மத்தை நிலைநாட்டக் காலந்தோறும் அவதரிப்பேன் என்று பரமாத்மா சொன்னாரே… அது பொய்யல்ல; நமது காலத்தில் அவர் நக்சலைட்களாக அவதரித்திருக்கிறார் என்ற சில்க்கின் வார்த்தைகள், இளமையில் அவர் அனுபவித்த கொடுமைகளின் வெளிப்பாடாகவே பார்க்கப்பட வேண்டியவை. தான் அனுபவித்த கொடுமைகளின் காரணமாகவே தன்னை தேடி வந்தவர்களுக்கு இல்லை எனாது அள்ளி வழங்கினார் சில்க் ஸ்மிதா. தனது சொந்த ஊரில் பண்ணையார்களுக்கு எதிராக போராடிய மக்களுக்கு பணத்தை அள்ளி வழங்கி நிதி உதவி செய்தார். இப்படி தன்னால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் இயலாதவர்களுக்காக நேச கரம் நீட்டினார்.

சிறுவயதில் வறுமையை கண்ட சில்க்கின் வாழ்க்கை இளமையில் வெறுமையை நோக்கியே பயணித்தது. தனது வாழ்க்கையில் யாரை தன்னோடு சேர்த்து கொள்ளவேண்டும்.. யாரை தவிர்க்க வேண்டும் என்பதில் தொடர்ந்து குளம்பி கொண்டே தான் இருந்தார். கோடிகளை சம்பாதித்த போதும் குடும்பத்தினரை விட்டு விலகியே இருந்தார் சில்க். அவரது இந்த தடுமாற்றம் தான் வாழ்க்கையின் இன்னல்களுக்கு காரணம் என்றும் கூறப்பட்டது.

நான் நடிகையாக வேண்டும் என்று கூறிய போது எனது குடும்பத்தினர் எதிர்த்தனர். ஆனால் நான் பணம் சம்பாதிக்க தொடங்கிய போது அது அவர்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை என பத்திரிகை ஒன்றில் வேதனையோடு பகிர்ந்து கொண்டார் சில்க்.

தன்னை சந்திக்க வந்த சில்க் ஸ்மிதா எனக்கு அழகு இருக்கிறது. புகழ் இருக்கிறது. பணம் இருக்கிறது. ஆனால், மனநிம்மதி இல்லை! என கூறியதாக அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் மதுரை ஆதினம். ஆம் சில்க்கின் தனிப்பட்ட வாழ்க்கை வேதனைகளால் மட்டுமே நிறைந்திருந்தது. அவரை நாடி சென்றவர்கள் அனைவரும், அவரது உடலுக்காகவும், பணத்திற்காகவும் மட்டுமே நாடி சென்றனர்.

தன்னை சுற்றி இருந்தவர்கள் மீதான சில்க்கின் சந்தேக பார்வை எப்போதும் அவரது நிம்மதியை குலைத்து கொண்டே தான் இருந்தது. ஊடகவியலாளர்கள் தன்னை பற்றி வேண்டுமென்றே தவறாக எழுதுவதாக குற்றம் சாட்டினார் சில்க். என் வளர்ச்சி மற்றும் வெற்றியை கண்டு சிலர் பொறாமை படுகிறார்கள். அதனால் அவர்கள் எனக்கு தீங்கிழைக்கவும், எனது புகழை சீர்குலைக்கவும் எண்ணுகிறார்கள் என்று வெளிப்படையாகவே விமர்சித்தார். அவரது இந்த நிலைக்கு காரணம், ஊடகங்களில் வெளியான செய்திகள் தான்.

தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் ஒருவரை பற்றிய செய்தியை பரப்புவதில், பத்திரிகைகளும் ஊடகங்களும் போட்டி போட்டு கொண்டன. சில்க் ஸ்மிதாவின் சொந்த வாழ்க்கை பற்றி செய்திகள் ஊடககங்களில் விவாதிக்கப்பட்டன. சில்க்கின் நிழலாக தொடரும் தாடி காரர் என செய்தி வெளியிட்டன. இவற்றை எல்லாம் சில்க் விரும்பவில்லை.

ஒரு முறை சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்திய வினுசக்ரவர்த்திக்கும், சில்கிற்கும் இடையே இருக்கும் உறவு பற்றி தவறான கண்ணோட்டத்தில் செய்தி வெளியிட்டது. அதற்கு எதிர்ப்பை பதிவு செய்த சில்க், வினு சக்ரவர்த்தி தனது குருநாதர் என்றும் அவரையும் தன்னையும் பற்றி தவறாக எழுதுவதா என்றும் கேள்வி எழுப்பினர்.

இந்த பரபரப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கும் போதே 1996ஆம் ஆண்டு, செப்டம்பர் 23ஆம் தேதி சில்க் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதாவின் மரணம் இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறியது. சில்க் ஸ்மிதா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என ஒரு தரப்பு கேள்வி எழுப்ப, அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை கிளப்பியது மற்றொரு தரப்பு…

இறந்த சில்க் ஸ்மிதாவின் உடல் சென்னை ராயபேட்டை மருத்துவமனையில் அநாதையாக வைக்கப்பட்டிருந்தது. ஒட்டு மொத்த தமிழினத்தையும் மகிழ்வித்த கலைமகள் ஒருவர், பிணவறையில் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்காக உரிமை கொண்டாட யாரும் இல்லை. இந்த நிலையில் தான் ஆந்திராவில் இருந்த அவரது உறவினர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. பதற்றத்தோடு சென்னை வந்து சேர்ந்தனர் சில்க் ஸ்மிதாவின் தாயும் சகோதரரரும்.. ஸ்மிதாவை கொலை செய்துவிட்டனர், சொத்துக்காக கொன்னுட்டாங்க. அதை விசாரிங்க’, என்று கதறியழுதனர் இருவரும்….

ஆனால் அவர்களின் குரல் அப்போது எடுபடவில்லை. ஏன் சில்க் ஸ்மிதா தரப்பை சார்ந்த பலரும் இதே குற்றச்சாட்டையே முன் வைத்தனர். ஆனால் அவற்றிற்கெல்லாம் செவி சாய்க்க தமிழக காவல்துறை தயாராக இல்லை. சில்க் மரணம் தொடர்பாக டஜன் கணக்கில் கெள்வி எழுப்பின ஊடககங்கள் . ஆனால் சில்க் ஸ்மிதாவின் மரணத்தை தற்கொலை என முடித்து வைத்தது காவல் துறை. ஆனால் அவரது மரணம் தொடர்பான மர்மம் இன்று வரை நீடித்து கொண்டே தான் இருக்கிறது.

1990 களின் தொடக்கத்தில் சில்க் ஸ்மிதா காதல் வயப்பட்டதாகவும், தனது காதலருக்காக திரைப்படம் தாயரித்ததாகவும் சொல்லப்பட்டது. அதில் ஏற்பட்ட நஷ்டம் தான் சில்க் ஸ்மிதாவை தற்கொலை முடிவை நோக்கி நகர்த்தியதாக காரணம் கூறப்பட்டது. ஆனால் சில்க் ஸ்மிதாவின் மரணம் கொலை என்றே மற்றாரு தரப்பு வாதிட்டது. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மோசமான நிலையில் அவர் இல்லை. அவர் கொலைதான் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றார் சில்க் ஸ்மிதாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான திருப்பதி ராஜா.

தமிழில் வண்டிசக்கரம் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே தெலுங்கில் தனது இயக்கத்தில் சில்க் ஸ்மிதா நடித்து விட்டதாகவும், அவரது முதல் படம் வீணையும், நாதமும் என்ற தெலுங்கு படம் தான் என்றார் திருப்பதி ராஜா. சில்க் ஸ்மிதா முன்னணி நடிகையாக இருந்தபோது திருமணமாகி குழந்தைகளுடன் இருந்த ஒரு தாடிக்காரன் திடீரென வந்து ஒட்டிக்கொண்டார். கால்ஷீட் உள்ளிட்ட சினிமா சம்பந்தமான எல்லா வேலைகளையும் அந்த நபர்தான் கவனித்தார். அந்த நபரை சில்க் ஸ்மிதா ரொம்ப நம்பினார் என கூறும் அவரது சகோதரர் நாகவர பிரசாத், அந்த தாடிகாரர் தான் சில்க் ஸ்மிதாவின் மரணத்திற்கு காரணம் என குற்றம்சாட்டுகிறார்.

சில்க் இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு அவரது தாயார், வந்து சந்தித்து சென்றதாகவும், அப்போது தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை என்றும் செய்தியாளர்கள் முன்பு கண்ணீர் வடித்தார் நாகவர பிரசாத். சில்க் ஸ்மிதா எழுதியதாக கொடுக்கப்பட்ட கடிதத்தையும் நிராகரித்தார் நாகவரபிரசாத். அதில் இருந்தது சில்க்ஸ்மிதா கையெழுத்து இல்லை. ஆதாரங்களை அழித்துவிட்டனர். ஸ்மிதா சாவில் மர்மம் இருக்கிறது என புலம்பினார். ஆனால் அவரது புலம்பல்கள எடுபடவில்லை. சில்க் ஸ்மிதாவுடன் ஒட்டி கொண்டதாக கூறப்பட்ட தாடிகாரர் பற்றியும் காவல்துறை விசாரிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. வாழும்போது சந்தோசத்தை இழந்து மர்மதேசத்தில் வாழ்ந்த சில்க் ஸ்மிதாவின் மரணம் கூட மர்மமாகிவிட்டது.

வாழ்ந்த காலத்தில் ஹீரொயின்களை விட அதிக சம்பளம் வாங்கிய சில்க் ஸ்மிதாவின் மறைவிற்கு சக நடிகைகள் கண்ணீர் வடித்தனர். தனது வாழ்க்கை என்ன என்று அறியாமலே சில்க் ஸ்மிதா மறைந்து விட்டார் என வருத்தம் தெரிவித்தனர். சில்க் ஸ்மிதா மறைந்தாலும், இன்று வரை அவரை கொண்டாடவே செய்கின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள். 90 களின் இறுதியில் பிறந்த இளைஞர்கள் கூட, சமூகவலைதளங்களில் பார்த்து, சில்க் ஸ்மிதாவின் நடிப்பை கொண்டாடுவது தான் அவருக்கான வெற்றி.

ஆயிரம் நடிகைகள் வரலாம், கவர்ச்சி காட்டலாம், குத்தாட்டம் போடலாம். ஆனால் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக என்றும் வலம் வந்து கொண்டிருப்பவர் சில்க் ஸ்மிதா மட்டுமே. சினிமாவை பொறுத்தவரை சில்க் ஒரு சகாப்தம். ஆனால் சொந்த வாழ்வில் பூஜ்யமாகி போனார். கவர்ச்சி கன்னியாக அறியப்படும் எவருடைய தனிப்பட்ட வலிகளையும் அறிந்து கொள்ள நாம் தயாராக இல்லை. ஒவ்வொரு நகைச்சுவை நடிகரின் சொந்த வாழ்க்கையும் வலிகளால் நிறைந்தது என்பார்கள். அதே போன்று தான் சினிமாவில் கவர்ச்சி கன்னிகளாக வலம் வரும் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை இருதலை கொள்ளி எறும்பாகவே மாறிப் போகிறது என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் விஜயலெட்சுமி என்னும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை,

இன்னும் நம்ப முடியவில்லை
இதுவும் மரணத்துக்கு நீ கொடுத்த
மாடலாக இருக்கக் கூடாதா?
அணிந்துபார்க்க முடியாமல்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

Halley Karthik

மம்மூட்டி, மோகன்லாலுக்கு கோல்டன் விசா: ஐக்கிய அரபு அமீரகம் கவுரவம்

Gayathri Venkatesan

கொரோனா சோதனை செய்தால் பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் தம்பதி செய்த விபரீத செயல்!

EZHILARASAN D