31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள் விளையாட்டு

கால்பந்தின் அரசன் பீலே; யாராலும் எதிர்கொள்ள முடியா ஒற்றை சூறாவளியின் கதை


பரணிதரன்

கட்டுரையாளர்

பீலே தனது 3வது உலகக்கோப்பையை வென்ற அடுத்த நாள், பிரபல அமெரிக்க நாளிதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில், இப்படி இருந்தது. பீலே என்பதை எப்படி உச்சரிப்பீர்கள்? கடவுள் என்று. அப்படி கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய பீலே வரலாறை சற்று திரும்பிப் பார்க்கலாம்…

1966 ஒட்டுமொத்த மைதானமே அதிர்ச்சியில் உறைந்த தருணம் அது. ஒற்றை ஆளாய் மொத்த அணியையும் தாங்கிய அந்த வீரர் காயத்தால் வெளியேற. 2 முறை உலகக்கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணி குரூப் சுற்றிலேயே தோல்வியை தழுவியது. ஒட்டுமொத்த கால்பந்து அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாய் விளங்கிய அந்த வீரர் பீலே.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

போர்ச்சுக்கலுடன் நடைபெற்ற போட்டியில் அந்நாட்டு கால்பந்து வீரரால் பீலே மோசமான முறையில் கீழே தள்ளப்பட்டு காலில் பலத்த காயத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார். வேண்டுமென்றே பீலேவை முடக்கி போர்ச்சுக்கல் வெற்றிபெற்றதாக சர்ச்சைகள் வெடித்ததெல்லாம் வேறு கதை. ஆனால் அந்த கதையில் இன்றுவரை ஜொலிக்கும் பெயர் பீலே.

சர்வதேச கால்பந்து சம்மேளத்தால் உலகின் மிகச்சிறந்த வீரராக போற்றப்படும் பீலேவின் வாழ்க்கை கடும் உளிகளால் செதுக்கப்பட்ட சிற்பம் போன்றது. பிரேசில் நாட்டு கால்பந்து அணிக்காக தனது 17 வது வயதில் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்ற பீலே அந்த இடத்தை அடைய கடுமையாக போராட வேண்டியதிருந்தது.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பீலேவிற்கு கால்பந்து விளையாட்டின் மீது அதீத ஆர்வம் இருந்தது. ஆனால் அவரது பெற்றோரால் அவருக்கு கால்பந்து வாங்கிக் கொடுக்கவோ, நல்ல காலணிகள் வாங்கிக் கொடுக்கவோ இயலவில்லை. வறுமை ஒருபுறம் கசக்கிப் பிழிய, சிறு வயதிலேயே ஷூ பாலிஷ் செய்யும் பணியில் ஈடுபட்டார் பீலே.

இருப்பினும் நேரம் கிடைக்கும்போதெல்லாம், நண்பர்களுடன் கால்பந்து விளையாடி வந்தார். மற்றவர்கள் போல தரமான காலணி வாங்க இயலாத பீலே காகிதங்களை தனது ஷூவிற்குள் திணித்து வைத்து விளையாடினார்.

பீலேவிற்கு கால்பந்து விளையாட்டின் மீது இருந்த ஆர்வம் மற்றும் திறமை அந்த ஊரைச்சேர்ந்த விளையாட்டு பிரியர்களை ஈர்த்தது. அவரது திறமை வீணாகிவிடக்கூடாது என எண்ணிய அவர்கள் பீலேவை அந்த ஊர் லோக்கல் கால்பந்து கிளப்பில் சேர்த்து விட்டனர். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பீலே, புதிய பாதையை உருவாக்கத்தொடங்கினார். ஆக்ரோஷமான ஆட்டம், தனக்கென ஒரு பாணி என பீலேவின் புகழ் பரவத்தொடங்கியது. பீலேவில் ஆட்டத்தைக் கண்டு மலைத்துப்போன சாண்டோஸ் அணி அவரது சிறு வயதிலேயே ஒப்பந்தம் செய்து கொண்டது.

கனக்கச்சிதமாக பந்தை கடத்தும் திறன், இரண்டு மூன்று பேரையும் லாவகமாக தாண்டிச்சென்று முன்னேறும் லாவகம் என எதிரணி வீரர்களை களத்தில் திக்குமுக்காடச் செய்வதால் பீலேவைக் கண்டு மற்ற அணியினர் பொறாமையும் அச்சமும் கொள்ளத்தொடங்கினர்.

1958 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்வீடனை அதன் சொந்த மண்ணில் 5-க்கு 2 என்ற கணக்கில் பந்தாடி பிரேசில் அணி தனது முதல் உலகக்கோப்பையை வென்றது… பிரேசில் அணி உலக அரங்கில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறுவதற்கு அந்த வெற்றியே அச்சாணியாக மாறியது. அதற்கு பீலேவின் பங்களிப்புதான் முக்கிய காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

உலகின் தலைசிறந்த வீரராக மாறியிருந்த பீலே 1962ஆம் ஆண்டிலும் பிரேசில் அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். அவரது பிரம்மாண்ட வளர்ச்சியை பொறுத்துக்கொள்ளாத சிலர் அவரை காயப்படுத்தி வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே வியூகங்கள் வகுத்து வந்தனர். களத்தில் பீலேவின் விளையாட்டை எதிர்கொள்ள முடியாத அவர்கள் அவரை முடக்க சதித்திட்டம் தீட்டியதன் விளைவாக தொடர்ந்து 3வது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் பிரேசில் அணியின் கனவு கை நழுவியது. வலியுடன் களத்தில் இருந்து வெளியேறிய பீலேவால் இந்த சதியை சகித்துக் கொள்ள முடியவில்லை. வெறுப்பின் உச்சத்தில் இனி உலகக்கோப்பை போட்டியில் விளையாடவே மாட்டேன் என அவர் சபதம் எடுக்கும் அளவிற்கு அந்த சம்பவம் அவரை காயப்படுத்தியது.

பீலேவின் முடிவால் அதிர்ந்து போன பிரேசில் கால்பந்து சங்கம், அவரை சமாதானப்படுத்தி முடிவை மாற்றவைத்தது. என்றும் இல்லாத புத்துணர்ச்சியுடன் தனது நாட்டுக்காக மீண்டும் அந்த கனவு கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் கண்டார் பீலே. 1970ம் ஆண்டு நடந்த மெக்சிசோவில் நடந்த உலகக்கோப்பையில், உலகம் அதுவரை கண்டிராத ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பீலே. பிரேசில் அணி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இத்தாலிக்கு எதிரான அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் உச்ச நட்சத்திரமாய் ஜொலித்தார் பீலே. அரங்கம் முழுக்க பீலேவின் பெயரை ரசிகர்கள் தாரக மந்திரமாய் முழங்கினர். அந்த முழக்கமே இத்தாலியை நடுங்கச் செய்தது. பீலேவின் அதிரடியால் இத்தாலி நிலைகுலைந்து பிரேசில் அணி 4க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் உலகக்கோப்பையை தன்வசப்படுத்தியது, தொடர் நாயகன் விருது பீலே வசமானது.

கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய பீலே அதிக கோல்கள் அடித்ததற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். கருப்பு முத்து என்றும் கால்பந்தின் அரசன் என்றும் அழைக்கப்படும் பீலே, இன்றும் இளைஞர்களின் உந்துசக்தியாக விளங்குகிறார். பீலே தனது 3வது உலகக்கோப்பையை வென்ற அடுத்த நாள், பிரபல அமெரிக்க நாளிதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில், இப்படி இருந்தது. பீலே என்பதை எப்படி உச்சரிப்பீர்கள்? கடவுள் என்று.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading